![Raid on Tasmac stores](http://image.nakkheeran.in/cdn/farfuture/m4GJi5V_IKtn5ZbTMbl8g5T-a1u0UurF0dBeVo8KfvA/1635531141/sites/default/files/inline-images/z145.jpg)
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த தெற்கிருப்பு பகுதியில் ஒரே இடத்தில் இயங்கிவரும் 3 டாஸ்மாக் கடைகளில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்கள் ஒன்றிற்கு ரூ10 கூடுதலாக வசூலிப்பதாகவும் அப்படி வசூலிக்கும் பணத்தை மாவட்ட டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரவிக்குமார் மாதம் ஒருமுறை நேரடியாக வந்து வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இதுகுறித்து ரகசியத் தகவல் அறிந்த கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா மெல்வின் சிங், ஆய்வாளர்கள் திருவேங்கடம், சண்முகம், மாலா ஆகியோர் அப்பகுதியில் காத்திருந்தனர். அப்போது தெற்கிருப்பு டாஸ்மாக் கடைக்கு காரில் வந்த மாவட்ட டாஸ்மாக் மேற்பார்வையாளர் ரவிக்குமாரை மடக்கி மேற்கண்ட 3 கடைகளின் மேற்பார்வையாளர்கள் ரவிக்குமாரின் ஓட்டுநர் ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி, கடைகளில் சரக்கு இருப்பு ரொக்கம் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 300 ரூபாய் இருந்தது. அவற்றைக் கைப்பற்றி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்புத்துறையின் தணிக்கை காரணமாக நேற்று மாலை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பாட்டிலுக்காக நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டதால் மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் மது பாட்டில்களை வாங்கி சென்றனர். டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சென்ற பிறகு டாஸ்மாக் கடையில் கூடுதலாக ரூ 10 வசூலிக்கப்பட்டது. இதனால் குடி பிரியர்களுக்கும் டாஸ்மாக் ஊழியர்களுக்குத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது.