புதுக்கோட்டை மாவட்டத்தில் காலையில் தொடங்கிய வாக்குப் பதிவில் ஆங்காங்கே குழப்பங்களும் சலசலப்புகளுடனும் வாக்குப் பதிவு நடந்தது.

அந்தவகையில், விராலிமலை ஒன்றியத்தில் 15 வார்டில் சுயேட்சை வேட்பாளரான அதிமுக பிரமுகர் சேகரின் சின்னம் மாறி இருந்ததால் குழப்பம் ஏற்பட்டிருந்தது. அதே விராலிமலை ஒன்றியத்தில் உள்ள ஆவூர் அருகில் உள்ள பெரியமுள்ளிப்பட்டி கிராமத்தில் வாக்குப் பதிவு முடிந்து வாக்குப்பெட்டி சீல் வைக்கப்படும் நேரத்தில் வாக்களிக்க வந்த ஒரு வாக்காளரிடம் வாக்குப் பதிவு முடிந்துவிட்டதாக கூறியதால், ஆத்திரத்தில் வாக்குப் பெட்டியை தூக்கிக் கொண்டு பாதுகாப்புக்கு நின்ற போலீசாரையும் தள்ளிவிட்டு ஓடிவிட்டார். சம்பவம் குறித்து இலுப்பூர் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் நீண்ட நேரத்திற்கு செடிக்குள் கிடந்த வாக்குப் பெட்டி மீட்கப்பட்டு, அதில் வேறு ஏதேனும் மாற்றங்கள் நடந்துள்ளதா என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.