Skip to main content

"பா.ஜ.க. கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும்"- பஞ்சாப் விவசாயி ராஜ்வீந்தர்சிங் கோல்டன் பேச்சு!

Published on 28/03/2021 | Edited on 28/03/2021

 

punjab farmer election campaign in tamilnadu

 

விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் தொடங்கிய விவசாயிகளின் போராட்டம் இன்று வரை தொடர்ந்து வரும் நிலையில், அதனைப் பற்றி கவலைப்படாத பா.ஜ.க. தற்போது ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இதனால் வெகுண்டெழுந்த டெல்லியில் போராடும் பஞ்சாப் விவசாயிகளின் பிரதிநிதிகள் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்குச் சென்று பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக பிரச்சாரங்களைச் செய்து டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

 

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிற்கு வந்த டெல்லி (பஞ்சாப்) விவசாயிகள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், அஜாத் கிஸான் சங்கர்ஸ் கமிட்டியின் பஞ்சாப் மாநில துணைத் தலைவருமான ராஜ்வீந்தர்சிங் கோல்டன் பல்வேறு இடங்களில் பிரச்சாரங்கள் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று (28/03/2021) மாலை புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மெய்யநாதனுக்கு ஆதரவு கேட்டு, கீரமங்கலம் அருகில் உள்ள பெரியாளூர் கிராமத்தில் தொடங்கி பல கிராமங்களில் பிரச்சாரம் செய்தார்.

 

பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது, "நான் டெல்லி போராட்டக் களத்தில் இருந்து வருகிறேன். வேளாண் சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று நாங்கள் டெல்லியில் தொடங்கிய போராட்டம் இன்றுவரை தொய்வின்றி போகிறது. இதுவரை 300 விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். ஒட்டு மொத்த விவசாயிகளின் நலனுக்காக விவசாயிகளை வஞ்சிக்கும் பா.ஜ.க. மற்றும் அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளை டெபாசிட் இழக்க வைத்து விரட்ட வேண்டும். தற்போது தேர்தல் நடக்கும் ஐந்து மாநிலத்திற்கும் டெல்லியில் போராடும் விவசாயிகளின் பிரதிநிதிகள் சென்றுள்ளனர். எனக்கு தமிழ் நன்றாக தெரியும் என்பதால் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறேன். 

 

எடப்பாடியும் இந்தச் சட்டங்களை ஆதரித்தவர் தான். இப்போது கூட்டணி வைத்திருக்கிறார். அதனால் இவர்களை தோற்கடிக்க வேண்டும். வேறு கட்சிகள், சினிமா நட்சத்திரங்களுக்கு ஆதரவாக நாங்கள் பேசினால் அவர்களை மிரட்டி விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். அதனால் தான் தி.மு.க.வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்கிறோம். இவர்கள் தான் விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் வந்து ஆதரவு கொடுத்தார்கள். இனிமேலும் ஆதரவு கொடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொள்கிறோம்.

 

தொடர்ந்து பேசிய அவர், "தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்கிறோம். ஆனால் மோடியிடம் வந்து தலைகுனிந்து நிற்கிறார்கள். இது தமிழர்களுக்கே அவமானமாக உள்ளது. அதனால் தமிழன் தலைநிமிர்ந்து நிற்க பா.ஜ.க.வையும், அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளக் கட்சிகளைத் தோற்கடித்து தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். முதல்வர் எடப்பாடி நானும் விவசாயி, வெல்லம் விற்றேன் என்கிறார். மோடி டீ விற்றேன் என்று சொல்லி நம்மை ஏமாற்றுகிறார்கள்" என்றார்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.