தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவுகள் நடைபெற்று, வாக்கு எண்ணும் நாளுக்காக தமிழகம் காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், வாக்குப்பதிவின்போது பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் வாக்குப்பதிவு பணிக்காக நியமிக்கப்பட்டு, அதன்படி தேர்தல் ஆணையம் பிரித்துக் கொடுத்த பணிகளை மிகச் சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.
தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட அரசு சார்ந்த பணியாளர்கள் பட்டியலில், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த காவல் பணியாளர்களும் அடங்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் காவல்துறைக்கு உதவியாக, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் முன்னெச்சரிக்கையான தகவல்கள் தர என பல்வேறு பணிகளில் ஈடுபடுத்த ஊர்க்காவல்படை என்ற அமைப்பை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஊர்க்காவல் படையினர் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 380 ஊர்க்காவல் படையினர் பணியாற்றி வருகின்றனர். தேர்தலின்போது இந்த ஊர்க்காவல் படையினர் அனைவரும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கான வாக்குப்பதிவு என்பது மறுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள ஊர்க்காவல் படையினருக்கு தபால் வாக்குகள் மூலம் தங்களுடைய வாக்கைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்க்காவல் படையினருக்கு மட்டும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
அதிகாரிகள் அவர்களுக்கான தபால் வாக்குகளைப் பதிவுசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஊர்க்காவல் படையினர், “எங்களுக்கு உரிமை இல்லையா” என்ற கேள்வியைக் காவல்துறையிடமும், தேர்தல் ஆணையத்திடமும் எழுப்பியுள்ளனர். “எங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற ஏன் எங்களை தேர்தல் ஆணையமும் காவல்துறையும் கருத்தில் கொள்ளவில்லை” என்று கேள்வி எழுப்பியவர்கள், “எங்களுக்கும் ஓட்டுப்போட உரிமை இருக்கிறது. எங்களுடைய வாக்குகளை ஏன் பதிவிடாமல் போனீர்கள்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இவர்களுக்கான தீர்வை தேர்தல் ஆணையம் எடுக்குமா? என்று பொதுமக்கள் தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.