Skip to main content

காணாமல் போகும் வரலாற்று சிறப்பு மிக்க மைல் கற்கள்!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

புதுக்கோட்டை மாவட்டம் தொல்லியல் சான்றுகள் நிறைந்த மாவட்டம். மாவட்டத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பல இடங்களில் பழமையான மைல் கல்களில்  தமிழ், அரபு, ரோமன் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ் எண்கள் நடைமுறையில் இருந்துள்ளது. கடந்த வாரம் கூட தஞ்சை மாவட்ட எல்லையில் மைல் கல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 
 

Pudukkottai milestones issue

 

 

இப்போது தமிழ் மைல் கல்  கண்டுபிடித்துள்ள  இதே தொல்லியல் ஆய்வுக் கழகக்  தலைவர் மணிகண்டன் குழுவினர், "2014 ஆம் ஆண்டு தஞ்சாவூர் - புதுக்கோட்டை நெடுஞ்சாலையிலுள்ள கூழியான்விடுதி கிராமத்திலும்,  புதுக்கோட்டை -  விராலிமலை சாலையிலுள்ள  அன்னவாசல், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தமிழ் - அரபு எண்கள் பொறிக்கப்பட்ட மைல்கல்லையும்,  தஞ்சாவூர் மாவட்டம் மாப்பிள்ளை நாயக்கன்பட்டியிலும் அடையாளம் கண்டனர். 

இந்த மைல் கற்கள்  18 ஆம் நூற்றாண்டில் நடப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். இதில் தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அதாவது அக்கால தஞ்சாவூரை தலைமையிடமாக கொண்ட மாப்பிள்ளை நாயக்கன்பட்டியிலும் செங்கிப்பட்டியிலும் அரபு மற்றும் தமிழ் எண்களையும், புதுக்கோட்டை சமஸ்தான  நிர்வாகத்திற்குட்பட்ட  அன்னவாசல் மற்றும் கூழியான் விடுதி பகுதியிலிருந்த மைல் கற்கள் தமிழ் மற்றும் ரோமன் எண்கள் பொறிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

 



ரோமன் எண்களையும் தமிழ் எண்களையும்  பயன்படுத்தி இந்த மைல்கல் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம்  ஆங்கிலேயர் காலத்திலேயே தமிழ் எண்கள் அரசு மற்றும் பொதுமக்கள்  பயன்பாட்டில் இருந்துள்ளன என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது. இந்த  மைல் கற்கள் மூலம் பாதசாரிகள் மைல்கல்களில்  பொறிக்கப்பட்ட தமிழ் எண்களை அடையாளம் காணத்தெரிந்திருந்தனர் என்பதையும், சமீப காலமாகத்தான் தமிழ் எண்கள் பயன்படுத்துவது புழக்கத்திலிருந்து வழக்கொழிந்து போயிருக்கிறது என்பதையும் அறியமுடிகிறது" என்று கூறியிருந்தனர்.

தஞ்சை அரண்மனை மியூசியத்தில் ஆதனக்கோட்டை - தஞ்சாவூர் போக்குவரத்து மார்க்கத்தில் வைக்கப்படிருந்த மைல் கல் ஒன்று  பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் கூழியான்விடுதி தமிழ் மைல் கல்லை காண நாம் சென்று பார்த்த போது தற்போது வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த மைல் கல்லை காணவில்லை. மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பாக எடுத்துச் சென்றுள்ளதா என்றால் அப்படியும் தெரியவில்லை. அதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கண்டறியப்பட்ட தமிழ் எண்களுடன் கூடிய மைல் கல்களை மாவட்ட நிர்வாகம் மீட்டு அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் கூழியான்விடுதி மைல் கல் என்ன ஆனது? யார் தூக்கிச் சென்றார்கள் என்பதை கண்டுபிடித்து மீட்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. 
 
 

சார்ந்த செய்திகள்