புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இந்திய அரசியல் சாசன தினத்தின் 70- ஆவது விழா பள்ளி தலைமை ஆசிரியர் கி.இராணி தலைமையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பெ.வெ.அருண்சக்திகுமார் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியதோடு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் கடமைகளைப் பற்றி விளக்கிப் பேசினார்.
மேலும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் உங்களால் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனையாளர்களாக உயர முடியும். நானும் அரசுப் பள்ளியில் படித்துத்தான் மருத்துவராகி பிறகு போட்டித் தேர்வு எழுதி ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்திருக்கிறேன். அதனால் உங்களாலும் முடியும். இந்தப் பள்ளியில் படிக்கும் நீங்கள் மிக, மிக பின்தங்கிய வறுமையில் வாடும் குடும்பத்திலிருந்து படிக்கிறீர்கள். பாடத்திட்டங்களை புரிந்து ரசித்து முறையாகக் கற்பதோடு பொது அறிவுத் திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் பல உயர்ந்த பொறுப்புகளுக்கு நீங்கள் வரவேண்டும். உங்களில் உயர்ந்த பதவிகள் தான் உங்கள் பெற்றோருக்கும், இப்பள்ளி ஆசிரியர்களுக்கும், இவ்வூர் பொதுமக்களுக்கும் பெருமை சேர்க்கும் என்றார்.
முன்னதாக ஆசிரியர் ஹரிராம் வரவேற்க, ஆசிரியர் சரண்யா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பார்வதி, மரகதம், பிரமிளரசன், முருகவேல், ராமமூர்த்தி, செந்தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.