Skip to main content

''தலித் ஆண்கள் கொங்கு சமூக பெண்களை காதலிக்க கூடாதாம்!''; அரசுத்தரப்பு சாட்சி வாக்குமூலம்!!

Published on 02/02/2019 | Edited on 02/02/2019
y


தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை சார்பில் தலித் சமூக ஆண்கள், கொங்கு சமூகத்து பெண்களை காதலிக்கக் கூடாது என்று தீர்மானம் போட்டதால், யுவராஜ் உள்ளிட்ட எதிரிகள் கோகுல்ராஜை கொலை செய்ததாக அரசுத்தரப்பு சாட்சி, நமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 1, 2019) பரபரப்பு சாட்சியம் அளித்தார்.


சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த சித்ராவின் மகன் கோகுல்ராஜ் (23). கடந்த 23.6.2015ம் தேதி கழுத்து அறுத்து கொல்லப்பட்டார். நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜின் சடலத்தை சிபிசிஐடி போலீசார், 24.6.2015ம் தேதி கைப்பற்றினர். 


இது ஓர் அப்பட்டமான ஆணவக்கொலை என்று அப்போது பரபரப்பு புகார்கள் கிளம்பின. இந்த கொலை வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்¢பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். சிபிசிஐடி தரப்பில் மொத்தம் 110 பேர் அரசுத்தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். கடந்த 30.8.2018ம் தேதி முதல் அரசுத்தரப்பு சாட்சிகளிடம், நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.


கைது செய்யப்பட்டவர்களில் அமுதரசு தலைமறைவாகிவிட, ஜோதிமணி என்ற பெண் சுட்டுக்கொல்லப்பட்டார். எஞ்சியுள்ள யுவராஜ் உள்பட 15 பேரும், தொடர்ந்து விசாரணையின்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

 

o


இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 1, 2019) கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) பிரகாஷ், சென்னை எழும்பூரில் பணியாற்றி வரும் துணை வட்டாட்சியர் அருண், நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் சந்திரமாதவன் ஆகியோர் சாட்சியம் அளித்தனர். 


விஏஓ பிரகாஷ் நீதிமன்றத்தில் கூறுகையில், ''கடந்த 8.10.2015ம் தேதி இரவு 10.30 மணியளவில் கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி, கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக என்னுடைய அலுவலகம் அருகே காத்திருப்பதாக செல்போன் மூலம் தகவல் அளித்தார். நல்லிபாளையம் பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும் வழியில் சாவடி பேருந்து நிறுத்தம் உள்ளது. 


அங்கே மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களிடம் விசாரிப்பதற்காக வாகனத்தில் இருந்து இறங்கினர். அதைப்பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடினர். பிரபு என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் விசாரித்தபோது, கோகுல்ராஜ் வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜின் கூட்டாளி என்றும், அவருக்கு உதவி  செய்தவர்களில் நானும் ஒருவன் என்று கூறினார். 


அப்போது யுவராஜ் தரப்பு வழக்கஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ குறுக்கிட்டு, தலைமறைவாக இருந்த யுவராஜ் என்று குறிப்பிட்டதற்கு ஆட்சேபணை தெரிவித்தார். அதற்கு நீதிபதி, எடுத்து எடுப்பிலேயே ஆட்சேபணை மறுக்கப்படுகிறது என்றார். அதற்கு ஜி.கே., ஏதே விளக்கம் சொன்னார். ஆனாலும், அவருடைய ஆட்சேபணையை நீதிபதி ஏற்கவில்லை.


விஏஓ பிரகாஷ் தொடர்ந்து கூறுகையில், ''தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை சார்பில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், கொங்கு வெள்ளாள கவுண்டர் பெண்களை காதலிக்கக்கூடாது என்று ஒரு கட்டுப்பாடு விதித்து இருக்கிறோம். அந்த நிலையில், 23.6.2015ம் தேதியன்று சுவாதியும், ஓமலூர் வட்டத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தனர்.


இப்போது மீண்டும் எதிர்தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. ஆட்சேபணை தெரிவித்தார். அதற்கு நீதிபதி, என்ன வகையான ஆட்சேபணை? எதற்காக இதற்கெல்லாம் ஆட்சேபிக்கிறீர்கள்? என்றார். அதற்கு ஜி.கே., 'சார்... இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திற்குச் சென்றால் எதிர்தரப்பு வழக்கறிஞர் இந்த சாட்சியத்தின் கருத்துக்கு ஆட்சேபிக்கவில்லையா? என்று கேட்பார்கள். அரசுத்தரப்பு சாட்சி, அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சுவாதி என்ற பெண்ணும், கோகுல்ராஜூம் இருந்தார்கள் என்று எதை வைத்து  சொல்வார்? அதனால் அந்த கருத்து, இந்திய சாட்சிகள் சட்டம், பிரிவு 27ன்படி ஏற்கத்தக்கது அல்ல. சாட்சியின் கருத்தை உரிய சாட்சியமாக எடுத்துக்கொள்ளக்கூடாது  என்று ஆட்சேபித்தார். அதை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.


பின்னர் விஏஓ பிரகாஷிடம், யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் ஜி.கே. குறுக்கு விசாரணை நடத்தினார். அதன்பிறகு, துணை வட்டாட்சியர் அருண், நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் சந்திரமாதவன் ஆகியோரும் சாட்சியம் அளித்தனர். சந்திரமாதவன் மட்டும் தொடர்ந்து இரண்டு மணி நேரம் சாட்சியம் அளித்தார். நேரமின்மையால் அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படவில்லை.


இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை மறுநாள் ஒத்திவைக்கப்படுவதாக (அதாவது பிப்ரவரி 2, 2019ம் தேதிக்கு) நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். வரும் மார்ச் மாதத்திற்குள் அரசுத்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதால், சாட்சிகள் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.

            

சார்ந்த செய்திகள்