சாப்பாடு, தண்ணீர் என எதுவும் எடுத்துக்கொள்ளாமல் பல நாட்களாக தொடர்ந்து பப்ஜி விளையாடிய 16-வயது சிறுவன், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஜஜுலகுண்டா கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் கடந்த சில நாட்களாக எந்த ஆகாரமும் எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து பப்ஜி எனும் ஆன்லைன் விளையாட்டை விளையாடியுள்ளார். இதனால், உடலில் நீர்ச்சத்து குறைந்து நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நோய்த் தொற்று இல்லை என சோதனை முடிவு வந்தது. இருப்பினும் தொடர்ந்து கடும் வயிற்றுப்போக்கு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த திங்களன்று அவர் உயிரிழந்தார். ஏற்கனவே 'ப்ளூ வேல்' போன்ற பல விளையாட்டுகள் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கியுள்ள நிலையில் பெற்றோர்கள் கூடுதல் விழிப்புடன் குழந்தைகளைக் கவனிக்க வேண்டும் எனக் குழந்தைகள் நல ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.