முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசே நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறுவுறுத்தியதின் பேரில் தமிழக அமைச்சரவை அவர்களை விடுதலை செய்யலாம் என்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சிறையில் இருந்து வரும் 7 பேரையும் விடுதலை செய்வதில் அக்கரை காட்டி வரும் தமிழக அரசைக் கண்டித்தும் அவர்களின் விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருவோரை தேசவிரோத சட்டத்தில் கைது செய்யக் கோரியும் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி நகரிலுள்ள காந்தி மண்டப வளாகத்தில் காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அய்யலுசாமி என்பவர் கண்களில் கருப்புத் துணி கட்டிக் கொண்டு சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினார். கோரிக்கைகள் அடங்கிய பாதாகைகளையும் உடன் வைந்திருந்தார்.
இதனையறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவரைக் கைது செய்தார்கள். இதனால் அந்தப் பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.