இந்தியா முழுவதும் கரோனவின் பரவல் அதிதீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பல மாநிலங்களும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அதேபோல் தமிழகத்திலும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து, சில தளர்வுகளுடனான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தினக்கூலிக்கு வேலை செய்வோர், சாலையோர மக்கள், ஆதரவற்ற மக்கள் என பலரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கடும் நெருக்கடியான சூழலை தமிழகம் சந்தித்துவந்தாலும், அரசின் முன்னேற்பாடுகள் பலரையும் கடும் பாதிப்புக்கு உள்ளாக்காமல் உதவியாக இருந்துவருகிறது. அதேபோல் கரோனாவில் இருந்து முழுமையாக நம்மை தற்காத்துக்கொள்ள அரசு மற்றும் மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்திவருகின்றனர்.
அரசியலைச் சார்ந்தவர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்களால முடிந்த உதவிகளை மக்களுக்கும் செய்துவருகின்றனர். அந்த வகையில் ராஜீவ் காந்தியின் நினைவுதினமான இன்று (21.05.2021) வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மெளலானா வேளச்சேரி, கம்பர் தெரு, நேரு நகரில் ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ராஜீவ் காந்தி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரிடம் 7 பேர் விடுதலை தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் தெரிவித்ததாவது, “பிரியங்கா காந்தி தமிழகத்திற்கு வந்து சிறையில் இருக்கும் 7 பேர் விடுதலை வழக்கில் சம்பந்தம்பட்ட நளினி என்ற பெண்ணை நேரில் சென்று பார்த்தார். உள்ளே சிறைக்குச் சென்று பார்த்துவிட்டு வெளியே வந்ததும், ‘நான் எனது தந்தையைக் கொலை செய்தவர்களை மன்னித்துவிட்டேன்’ என்று கூறினார், அதேதான் ராகுல் காந்தியும் கூறினார்.
இது காங்கிரஸ் கட்சியின் பெரிய மனப்பான்மையைக் காண்பிக்கிறது. அதேபோல், கோயம்புத்துர் குண்டு வெடிப்பில் சம்பந்தபட்டவர்களில் நிறைய பேர் குற்றவாளிகளாக நிரூப்பிக்கப்படாமல் 1998 இலிருந்து சிறையில் இருக்கிறார்கள். அந்தக் குற்றவாளிகளுக்கு எப்போது விடுதலை தரப் போகிறார்கள் என்பது என்னுடைய கேள்வியாக முன்வைக்கிறேன். அந்தக் குற்றவாளிகளும் நிரூபணம் ஆகாமல் உள்ளே இருக்கிறார்கள். அவர்களுக்கு விடுதலை தர வேண்டும் என தமிழக முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற வழக்குகளை அரசியலாக பார்க்க வேண்டும் என்றால், கோயம்புத்துர் வழக்கில் 55 பேர் ஆர்.எஸ்.எஸ். பிரிவைச் சேர்ந்தவர்கள் எந்தக் காரணமும் இன்றி விடுவிக்கப்பட்டார்கள் என ஆர்.டி.ஐ ரிப்போர்டில் கூறுகிறார்கள். அதனால் நாங்கள் கடிதங்கள் எழுத விரும்பவில்லை, நாங்களும் நீதிமன்றத்திற்கும், அரசுக்கும் வேண்டுக்கோள் வைக்கிறோம் அதற்கு பின்பு சட்டம் தன் கடமையைச் செய்யும்” என அவர் கூறினார்.