பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார். அதன்படி, நேற்று மாலை சென்னையில் நடந்த கேலோ விளையாட்டு போட்டி துவக்க விழாவில் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று பிரதமர் மோடி ஓய்வெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பேக்கரும்புக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் சென்றடைந்தார்.
அப்போது அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடினார். அதன் பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று கோயிலில் உள்ள 22 புண்ணிய தீர்த்தக் கிணறுகளில் நீராடிவிட்டு ராமர் பாதத்தை தரிசித்தார். கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகளும், அனைத்து மரியாதைகளும் செய்யப்பட்டன. பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.