![PR PANDIAN PRESSMEET](http://image.nakkheeran.in/cdn/farfuture/JG1pTNjEcUhwgdiRvhlQFPTYaAqvgrduZgtvCq7zC7A/1600624642/sites/default/files/inline-images/RERERE.jpg)
மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர திருத்த சட்டம் விவசாயிகளை கார்ப்ரேட்டுகளிடம் அடிமைபடுத்தும் என்றும் இதற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கக்கூடாது என்றும் விவசாய சங்கள் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்திவருகின்றனர்.
இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், "மத்திய அரசு விவசாயிகளுக்கு நலன்பயக்கும் என்கிற பேயரில் விவசாயிகளுக்கு எதிரான கருப்பு சட்டங்களை நிறைவேற்றியதன் மூலம் கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக அடிமைப்படுத்தும் எனவே இச்சட்டத்தை உடனே திரும்ப பெற வேண்டும். (ஆன்லைன் டிரேட்) யூகபேர வணிகம் அனுமதிக்கப்பட்டதால் குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) நிர்ணயம் செய்து உறுதி படுத்துவது யார்?
இந்தியா முழுவதும் தடையற்ற வர்த்தகம், கிடங்குகளில் இருப்பு வைக்க கட்டுபாடுகள் நீக்கப்பட்ட நிலையில் உற்பத்தி பற்றாக்குறை ஏற்பட்டாலோ, பேரிடர் காலத்தில் மாநிலங்களில் உணவு பொருள் தேவை ஏற்படின் பதுக்கலை வெளிக்கொண்டு வர மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டா?
ஒப்பந்த சாகுபடி முறையில் கடந்த காலத்தில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளால் மாநில அரசுகள் தான் விவசாயிகளுடனும், வியாபாரிகளிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினோம் இதனை தற்போதைய நிலையில் சாத்தியமா?
சந்தைப்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்குமா? மத்திய அரசு தனக்கு தேவையான விவசாய விலை பொருட்களை உணவுக் கழகம் மூலம் கொள்முதல் செய்வதற்கான கொள்கை தொடருமா என இவைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் தெளிவுப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் மத்திய அரசின் (FCI) முகவராக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவது இனி தொடருமா? என்பது கேள்வி குறியாகி உள்ளது. கொள்முதல் நடைமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்போது இச்சட்டம் குறித்து உடனடியாக மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தை கூட்டி மாற்று கருத்துக்களை அறிந்து விவசாயிகள் நலன் கருதி தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்.
மத்திய அரசு பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்தை கேட்டு தீர்வு காண முயற்சிக்காமல் கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக வாக்கெடுப்பு நடத்தி மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டுள்ளது, இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதற்கு குடியரசு தலைவர் இச்சட்டத்திற்கு அனுமதி அளிப்பதற்கு முன் விவசாயிகளுக்கான பாதிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு அறிவுரை வழங்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் மசோதாக்களை திருப்பி அனுப்பி வைத்து மாநில அரசுகளின் கருத்தறிந்து உரிய மாற்றங்களுடன் மீண்டும் பாராளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்த முன்வர பிரதமருக்கு உத்தரவிட வேண்டும்" என்றார்.