பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை வழங்குகிறது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதை நேற்று சென்னை தீவுத் திடலில் உள்ள அன்னை சத்யா நகரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் இருக்கும் 6,79,183 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 வீதம் ரூ.67.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 6,79,183 குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் திண்டுக்கல் மாநகரில் உள்ள 10, 11 வார்டுகளில் பொங்கல் பரிசுத் தொகை வாங்க வந்த கௌசல்யா மற்றும் சகிலா பானுவிடம் கேட்டபோது, “கடந்த வருட பொங்கலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்கள் மட்டும்தான் கொடுத்தார். ஆனால் இந்த வருடம் ஆயிரம் ரூபாயுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையும் மற்றும் முழு கரும்பையும் கொடுத்திருக்கிறார். எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அதுலயும் முதல்வர் கொடுத்த பச்சரிசி, கடை அரிசி போல் வெள்ளையா நல்லா தெளிவாக இருக்கிறதே தவிர எந்த ஒரு கருப்பு அரிசியும் இல்லை” என்று தன் கையில் அள்ளிக் காண்பித்தார்.
அதுபோல் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி உள்பட சில சட்டமன்றத் தொகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேஷ்டி, சேலைகளையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்கள். இப்படி பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இலவச வேட்டி, சேலைகளையும் கொடுத்ததைக் கண்டு பொதுமக்களும் சந்தோசமாக வாங்கிச் சென்றனர்.