கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகில் உள்ள சூ.பள்ளிப்பட்டு கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார் மஞ்சுளா தேவி. நேற்று முன்தினம் இவர், அலுவலகத்தில் இருந்தபோது அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் வேலாயுதம் (40), மஞ்சுளா தேவியிடம் சென்று வேறு ஒருவரது பெயரிலுள்ள நிலத்தின் சிட்டாவைக் காட்டி, அதற்கு அடங்கல் எழுதித் தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது, கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளா தேவி, சிட்டாவில் பெயர் உள்ள நபரை, அலுவலகத்திற்கு வந்து அடங்கல் வாங்கிச் செல்லுமாறு கூறி வேலாயுதத்தை திருப்பி அனுப்பியுள்ளார். இதனால், கோபத்துடன் சென்றுள்ளார் வேலாயுதம். கிராம நிர்வாக அலுவலர், பணி காரணமாக அலுவலகத்தைவிட்டு வெளியே சென்றுள்ளார். அந்த நேரத்தில் வேலாயுதம், பூலாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த காந்தி என்பவரது பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டுவந்து, வி.ஏ.ஓ அலுவலகத்தை இடித்துச் சேதப்படுத்தியுள்ளார். பொதுமக்கள், சத்தம் போடவே அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் தியாகதுருகம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அவரது புகாரின் மீது சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்குப் பதிவு செய்து, கிராம நிர்வாக அலுவலகத்தை இடிக்கக் காரணமாக இருந்த வேலாயுதம், அதே கிராமத்தைச் சேர்ந்த இருசன், பொக்லைன் இயந்திர உரிமையாளர் காந்தி, ஆகிய 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்துள்ளனர்.
சிட்டாவுக்கு அடங்கல் தர மறுத்ததற்காகக் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை இடிக்கும் அளவிற்குச் சென்றுள்ள சம்பவம், அக்கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.