தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,997 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 68 நாட்களுக்குப் பிறகு நான்கு நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இரண்டாவது நாளாக நேற்று முன்தினம் கரோனா பாதிப்பு குறைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் சற்று அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,58,149 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 196 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,230 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 28 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 20,138 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,943 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,15,130 பேர் பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர். இன்று தமிழகத்தில் ஈரோடு உட்பட 20 மாவட்டங்களில் கரோனா ஒருநாள் பாதிப்பு அதிகரித்துள்ளது. 22 மாவட்டங்களில் கரோனா இறப்பு இன்று பதிவாகவில்லை. இணைநோய்கள் ஏதும் இல்லாத 9 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
திருப்பூர் மற்றும் நாகை, கோவை மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பால், மருந்தகம் உள்ளிட்ட கடைகளைத் தவிர பிற கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணி வரை மட்டுமே செய்யப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருப்பூரில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை 50 சதவிகித இருக்கைகளுடன் செயல்படலாம். அதேநேரம் இரவு 9 மணிவரை ஹோட்டலில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாவட்டத்தில் வணிக வளாகங்கள், சூப்பர் மார்கெட்டுகள் இயங்க தடை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
அதேபோல் நாகை மாவட்டத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதிவரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வருவதற்கும் நாகை மாவட்ட ஆட்சியர் தடைவிதித்துள்ளார். அதேபோல் கோவையிலும் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் 9 ஆம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா சற்று அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஊரடங்கை நீடிப்பதா என்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை வல்லுநர்கள், அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.