
சென்னை எழிலகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகத்தில் இன்று (26/11/2021) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "தமிழ்நாட்டில் வெள்ள நிவாரணமாக ரூபாய் 4,625.80 கோடி மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது. இரண்டு தவணைகளாக நிதி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்துவருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது; கரையோர மக்கள் கவனமாக இருக்க வேண்டும். தென் மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது.
செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மழையால் தமிழ்நாட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். திருவண்ணாமலையில் இரண்டு பேர், அரியலூர், சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். மழையால் 681 குடிசைகளும், 120 வீடுகளும் பகுதியாக சேதமடைந்துள்ளன. 152 கால்நடைகள் இறந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் பரிசீலித்து முடிவெடுப்பார்" எனத் தெரிவித்தார்.