தமிழகத்தில் நாளை (24/07/2022) டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்- 4 தேர்வு நடைபெறவுள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், விஏஓ, வரித் தண்டலர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட ஏழு பதவிகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்களுக்கான குரூப்- 4 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நாளை (24/07/2022) நடத்துகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 7,689 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ள இத்தேர்வை சுமார் 22.02 லட்சம் பேர் எழுதுகின்றனர். சென்னையில் 503 தேர்வு மையங்களில் சுமார் 1.56 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இதனிடையே, குரூப்- 4 தேர்வு நடப்பதையொட்டி, தமிழகம் முழுவதும் நாளைய தினம் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது போக்குவரத்துத்துறை. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் அறிவுத்தல்படி, மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சிறப்புப் பேருந்துகள் முறையாக நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.