கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் நகரினை ஒட்டியுள்ளது பெரிய ஏரி. கடந்த காலங்களில் இந்த ஏரி, கோமுகி அணையில் இருந்து வெளியேறும் ஒரு பகுதி நீராலும் மற்றும் மயூரா நதியில் இருந்து வரும் நீராலும் நிரம்பிக்கொண்டிருந்தது ஆனால் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பவில்லை
காரணம் போதிய மழை இல்லை, பெய்த மழையிலும் இந்த ஏரிக்கு வரும் நீர் வரத்து வாய்க்கால் பகுதி தூர்ந்து போயும் வாய்க்காலின் உட்பகுதிகளில் கற்பாறைகளின் அடைப்புகளாலும் தண்ணீர் வருவது தடுக்கப்பட்டு இதனால் ஏரிக்கு தண்ணீர் வந்து சேருவதில்லை. இந்த ஏரிக்கான நீர்வரத்து வாய்க்கால்களைச் சீர்செய்யும்படி பல ஆண்டுகளாக சின்னசேலம் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்
மக்களின் பல்லாண்டுகால போராட்டத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டு ஏரிக்கு நீர் வரத்து இருந்தது, வாய்க்கால்களைப் பொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர். இதன் காரணமாக சமீபத்தில் பெய்த கனமழையில் அதிக அளவில் ஏரிக்கு நீர் வந்து சேர்ந்தது. இதனால் சின்னசேலம் ஏரி முழு அளவில் நிரம்பியது. இதனைக் கண்டு சந்தோஷமடைந்த சின்னசேலம் பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நேற்று (20.01.2021) அந்த ஏரியில் மலர் தூவி வணங்கி வழிபட்டதோடு, சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஏரியில் முழு அளவு நீர் நிரம்பியதற்காக கங்காதேவிக்கு ஆட்டுக்கிடா வெட்டி பலியிட்டு வணங்கினார்கள்.
இதற்கான சிறப்பு பூஜை நடைபெற்றது. அதில் சின்னசேலம் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபு மற்றும் விவசாயிகள் உட்பட அப்பகுதி கிராம மக்கள் பெரும் அளவில் கலந்துகொண்டு பூஜை செய்து வழிபட்டு கொண்டாடினார்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் ஊர் ஏரி முழு அளவில் நிரம்பியதைக் கொண்டாடும் வகையில், ஆட்டுக் கிடா பலியிட்டு பூஜை நடத்திய சின்னசேலம் பகுதி மக்கள் மிகுந்த சந்தோஷத்தில் மிதக்கின்றனர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கேற்ற அளவில் தண்ணீரை நாங்கள் வணங்குகிறோம் என்கிறார்கள் சின்னசேலம் பகுதியில் வாழும் மக்கள்.