2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகளை போலீசார் நூதன முறையில் மீட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் பழமையான மாணிக்க விநாயகர் மற்றும் மாணிக்கவாசகர் சிலைகளைச் சட்ட விரோதமாக விற்க முயற்சி செய்வதாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் பாலமுருகனை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அதே சமயம் பாலமுருகனிடம் சிலையை வாங்குவது போன்று நடித்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாலமுருகனை போலீசார் வரவழைத்துள்ளனர்.
அதன்படி பாலமுருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் பிரபாகரன், மணிகண்டன் ஆகியோர் ஒரு பெட்டியில் இரு சிலைகளையும் வைத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் மூவரும் சிலைக்கான பணத்தை போலீசாரிடம் கேட்டுள்ளனர். அப்போது போலீசார் மூவரையும் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். அது மட்டுமின்றி இந்த கடத்தல் கும்பலிடம் இருந்த சிலையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரு சிலைகளும் திருவண்ணாமலையில் இருந்து திருடப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. இரு சிலைகளின் மதிப்பு 2 கோடி ரூபாய் எனப் போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.