டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. மக்கள், பத்திரிகையாளர்களை தாக்கும் அளவிற்கு டெல்லியில் வன்முறை அபாய கட்டத்தை எட்டியுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்தி, அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.