அரசு ஊழியர்கள், அதிகாரிகள் என்பவர்கள் பொதுமக்களிடம் ஏதாவது வேலையென அலுவலகம் வந்து மனு தந்தால், பொதுமக்களிடம் லஞ்சம் வாங்காமல் எந்த வேலையும் செய்யாதவர்கள், மக்களுக்கு மரியாதை தராதவர்கள் என்கிற குற்றச்சாட்டு உள்ளது.
அப்படிப்பட்ட அதிகாரிகள், ஊழியர்களிடம்மே லஞ்சம் வாங்கும் ஒரு அரசுத்துறையென்றால் அது அரசின் கருவூலத்துறை தான். அரசில் உள்ள எந்த துறையின் எந்த செலவினமாக இருந்தாலும் நிதியெடுக்க வேண்டும், நிதி பயனாளிகளுக்கு தர வேண்டும் என்றாலும், அது ஒரு ரூபாயாக இருந்தாலும் கருவூலத்துக்கு செலவுக்கான பில்களை கொண்ட பைல் அனுப்பி அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு சரியென கையெப்பம்மிட்ட பின்பே சம்மந்தப்பட்ட துறைக்கு பணம் தருவார்கள். மாத சம்பளமும் இவர்கள் மனது வைத்தால் தான். அரசின் வருவாய் செலவினத்தை ஒவ்வொரு மாவட்டம், தாலுக்கா அளவில் பராமரிப்பவர்கள் கருவூலத்தில் உள்ள அதிகாரிகள் தான்.
ஒருதுறை செலவின பைலை கருவூலத்துக்கு அனுப்பி, கருவூல அதிகாரிகள் பைலில் கேள்வி குறிப்போட்டு பைலை திருப்பி அனுப்பினால் மீண்டும் முதலில் இருந்து அந்த பணியை சம்மந்தப்பட்ட அரசு ஊழியர்கள் செய்ய வேண்டும். இதற்கு பயந்துக்கொண்டு ஒவ்வொரு பைல் அனுப்பும்போதும் கருவூல அதிகாரிகளை கவனிப்பார்கள். அப்படி தராத சக அரசு ஊழியர்களை மோசமாக நடத்துவார்கள். பணி ஓய்வுக்கு பின் ஓய்வூதியம் உட்பட சிலவற்றுக்கு கருவூலத்துக்கு பொதுமக்கள் சென்றால் இன்னும் மோசமாக நடத்துவார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட கருவூல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ளது. இங்குள்ள மாவட்ட கருவூல அலுவலகத்தின் கண்காணிப்பாளர் எந்த பைலுக்கும் பணம் வாங்காமல் கிளியர் செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு சென்றது.
அந்த புகாரின்படி திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி தேவநாதன் தலைமையிலான போலீஸார், நவம்பர் 1ந்தேதி காலை ரெய்டு நடத்தினர். இதில் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் அலுவலக கண்காணிப்பாளர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அந்த அலுவலகத்தில் ரெய்டு நடைபெற்று வருகிறது. இது திருவண்ணாமலை அரசு ஊழியர்களிடையே மகிழ்ச்சியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பாக இதே மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் ரெய்டு செய்து சுமார் 60 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகாரிகளிடம் லஞ்சப்பணத்தை கைப்பற்றினர். தற்போது மாவட்ட கருவூலத்திலேயே நடைபெறுகிறது. 10 நாள் இடைவெளியில் அடுத்தடுத்த ரெய்டுகளால் அந்த வளாகமே பதட்டத்தில் உள்ளது.