![Police arrested two men who threatening extorted money](http://image.nakkheeran.in/cdn/farfuture/FZlkQewifrX0hO8fQiFL_rjw5UUARbI_2K4HLl3G6jA/1700035174/sites/default/files/inline-images/998_158.jpg)
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சணமங்கலம் வனப்பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 2000 பணத்தைப் பறித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். சிறுகனூரைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சணமங்கலம் வனப்பகுதியில் சென்றுகொண்டிருந்தார் அப்போது அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் இவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 2000 பணத்தைப் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து காமராஜ் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் விசாரணை செய்து பணத்தைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை வலைவீசித் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த இரண்டு பேரைப் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் திருச்சி கீழ சிந்தாமணி ஓடத் தெருவைச் சேர்ந்த 27 வயதான மணிகண்டன், லால்குடி அருகே தெற்கு மகிழம்பாடியைச் சேர்ந்த சரத்குமார் எனத் தெரியவந்தது.
மேலும் விசாரணையில் சணமங்கலம் வனப்பகுதியில் காமராஜரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த சிறுகனூர் போலீசார் அவர்களைக் கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.