திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பகுதிக்கு அருகே உள்ளது திருவாலங்காடு ஊராட்சி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் இர்ஃபான். 20 வயதான இவர், அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே, இர்ஃபானுடன் சேர்ந்து அரக்கோணத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் அவரது நண்பர்களும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், கடந்த சில நாட்களாக இர்ஃபான் மற்றும் மூர்த்திக்கும் கஞ்சா விற்பனை செய்வதில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், கஞ்சா விற்ற பணத்தில் கொடுக்கல் வாங்கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இர்ஃபான் தரப்பினருக்கும் மூர்த்தி தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதனால், விரக்தியடைந்த மூர்த்தி, இர்ஃபானை கொலை செய்ய வேண்டும் எனத் திட்டம் தீட்டியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி காலை 11 மணியளவில் இர்ஃபான் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது மூர்த்தி மற்றும் அவரது நண்பர்கள், பள்ளிப் படிப்பை முடிக்காத கார்த்திக் மற்றும் விஷால் ஆகிய நான்கு பேருடன் அந்த ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அந்த சமயம், திடீரென இருதரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூர்த்தி மற்றும் அவரது அடியாட்களும் தான் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் இர்ஃபானை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
ஒருகணம், இதில் அதிர்ச்சியடைந்த இர்ஃபான், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கும் இங்குமாய் ஓட்டம் பிடித்துள்ளார். ஆனாலும் விடாத மூர்த்தி ஆட்கள், இர்ஃபானை துரத்திச் சென்று ரயில்வே அலுவலகத்தில் வைத்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அப்போது, அங்கிருந்த அரிச்சந்திராபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இர்ஃபானை கொலை செய்ய துரத்தியவர்களைத் தடுக்க முயன்றுள்ளார். இத்தகைய சூழலில், அங்கு போலீஸ் வருவதைப் பார்த்து அவர்கள் தப்பிக்கும் போது, அதில் மூர்த்தி என்பவரை போலீசார் பிடித்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் ரயில்வே போலீசார் மூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் பயணிகள் கூடும் ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொலை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.