![person passed away while catching fish](http://image.nakkheeran.in/cdn/farfuture/NC5v2-owpVNy12MxrCF5dQsiDLLw2xRwkQ6-tatxZNY/1660904936/sites/default/files/inline-images/hand-in_242.jpg)
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி(45). கூலி தொழிலாளியான இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். தனது பிள்ளைகளை கூலி வேலைக்குச் சென்று காப்பாற்றி வந்துள்ளார். இவர் குடியிருக்கும் வீடு, வீராணம் ஏரியை ஒட்டி உள்ளது.
கூலி வேலை கிடைக்காத நாட்களில் கோபி, அவ்வப்போது வீராணம் ஏரி கரையோர பகுதியில் இறங்கிச் சென்று ஏரியில் வலை வீசி மீன் பிடித்து வந்திருக்கிறார். அதுபோல் நேற்று மாலை வீராணம் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். இவரைப் போலவே அப்பகுதியில் உள்ள சிலரும் ஏரியில் வலைவீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நேற்று மாலை திடீரென்று இடி மின்னல் ஏற்பட்டுள்ளது. அப்போது வலை வீசி மீன்பிடித்துக் கொண்டிருந்த கோபி மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் கோபி சுருண்டு தண்ணீரில் விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கரைக்கு ஓடி வந்தனர்.
அவர்கள் உடனடியாக சோழதரம் காவல் நிலையத்திற்கும் ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளனர். அதையடுத்து ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாண்டி செல்வி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்னல் தாக்கி ஏரி தண்ணீரில் மூழ்கி இறந்த கோபி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் மீன்பிடித்தவர்களிடமும் பொதுமக்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.