![People says NO set up sand quarry](http://image.nakkheeran.in/cdn/farfuture/VdjRZJqSaF0nLj-n8w5WYLzrgyV1ZlgOxypDw0I91Sc/1654258236/sites/default/files/inline-images/th_2474.jpg)
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகில் பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள ஏனாதிமங்கலம் கிராமப் பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது சம்பந்தமாக மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் நேற்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதற்கு முடிவு செய்தனர். அதன்படி எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டுப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் காமராஜ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் கிராம பொதுமக்கள் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விவசாயிகள், விவசாயத்திற்கும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களின் தண்ணீர் தேவையையும் இந்த பெண்ணையாறு தான் காலம் காலமாக நிவர்த்தி செய்து வருகிறது. இங்கிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 500க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
1972ம் ஆண்டுக்குப் பிறகு சமீபத்தில்தான் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அதுவும் அணைக்கட்டுகள் உடைந்ததால் போதிய தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆற்றின் கரையோரம் உள்ள மாறங்கியூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு காரணம் கடந்த காலத்தில் செயல்பட்ட மணல் குவாரிகள் தான். அதேபோல் ஆற்றில் கண்ணுக்கெட்டிய தூரம் மணலே இல்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் இரண்டு முறைக்கு இப்பகுதியில் மேல் மணல்குவாரி அமைக்கப்பட்டு மணல்களை அள்ளினர். அனுமதிக்கப்பட்ட ஆழத்துக்கு மேல் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்பட்டதால் ஆறும் வறண்டது; நிலத்தடி நீரும் வறண்டது. மணல் அள்ளி செல்வதற்காக தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து சென்றதன் மூலம் கிராமங்களில் மாசு ஏற்பட்டு மக்களுக்கு பல்வேறு நோய்கள் உருவானது.
விழுப்புரம் பகுதியில் உள்ள கிராமங்கள் மட்டுமல்ல, விழுப்புரம் நகர மக்களுக்கும் இங்கிருந்துதான் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தநிலையில் மீண்டும் மணல் குவாரி அமைக்கப்பட்டால் நகரம், கிராமம் என்ற அனைத்து பகுதி மக்களின் குடிநீர் தேவையும் விவசாயமும் பாதிக்கும். எனவே, மணல் குவாரி அமைக்கக்கூடாது. மீறி அமைத்தால் மக்களைத் திரட்டி போராட்டத்தில் இறங்குவோம் என்று மணல் குவாரி அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையடுத்து மேலும் கருத்து தெரிவிக்க விரும்புவோர் வரும் 7ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. கருத்துக்கேட்பு கூட்டத்தில் பேசிய விவசாயி ஒருவர், “தமிழகத்தில் தற்போது ஆறுகள் கட்டாந்தரைகளாக மாறி கிடைக்கின்றன. காரணம் கடந்த காலத்தில் மணல் அள்ளப்பட்டது. மணலுக்கு மாற்றாக எம் சாண்ட் போன்றவைகளை பயன்படுத்தி கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதேபோல் செயற்கை மணல் இறக்குமதியும் செய்யப்படுகிறது. அதை இன்னும் கூடுதலாக இறக்குமதி செய்து கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், மணல் குவாரி அமைத்து மணலை மேலும் மேலும் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டத்தை இழக்க வேண்டி வரும். மணலுக்கு மாற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தண்ணீருக்கு மாற்று எதுவும் இல்லை. தண்ணீர் இல்லாவிட்டால் எதுவும் செய்ய முடியாது. விவசாயம் செய்யவும் மக்களின் தாகத்தைத் தீர்க்கவும் தண்ணீரால் மட்டுமே முடியும்” என்றார்.