![Panchayat Council Vice Presidents Federation Meeting in cuddalore](http://image.nakkheeran.in/cdn/farfuture/xErvPSoO-7jxk3IFR5krzcxoM9HeQ4iOAU8nV0r6awY/1601870916/sites/default/files/inline-images/vvu.jpg)
கடலூர் மாவட்டத்தில் உள்ளது மங்களூர் ஊராட்சி ஒன்றியம். இந்த ஒன்றியத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஊராட்சி துணை தலைவர்கள் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளனர். இந்த கூட்டமைப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டம் மங்களூரில் நடைபெற்றது.
இதில் கூட்டமைப்பின் தலைவர் ரேகா சந்திரசேகர், துணை தலைவர் ரியாஸ் பானு, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஊராட்சிகளில் நடைபெறும் அரசு திட்டப்பணிகளை துணை தலைவர் வார்டு உறுப்பினர்கள் ஆகியோரிடம் கலந்து பேசி திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதேபோன்று ஊராட்சிகளில் நடைபெறும் செலவினங்கள் குறித்து வெளிப்படையான கணக்கு வழக்குகள் இருக்க வேண்டும்.
கிராமங்களில் வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் ஆடுகளை உரிய ஏழை பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். அதேபோன்று அரசு அறிவிக்கும் கிராமசபை கூட்டத்தின்போது அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு கிராமங்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
இந்த கூட்டத்தின் முடிவில் 100 ஏழை குடும்பத்தினருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கும் உட்பட்ட கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் ஒன்றிணைந்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு என்று உருவாக்கியுள்ளனர். பல ஒன்றியங்களில் இதில் போட்டி அமைப்புகள் கூட உருவாகி செயல்படுகின்றன. ஆனால், துணை தலைவர்கள் கூட்டமைப்பு என்பது மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வேறு பல ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுகின்றதா என்பது தெரியவில்லை, இருந்தும் இதுபோன்ற கூட்டமைப்புகள் இருப்பது வரவேற்கத்தக்கது என்கிறார்கள் அவர்களை தேர்ந்தெடுத்த வாக்காளர்கள்.