![“Our கிங் Rasa Rasa Cholan” - Seaman Obsession](http://image.nakkheeran.in/cdn/farfuture/rstbt1Za0zdwe1dIuDoLU2I7dMWlVu5CQCsOpL_FOEM/1664778354/sites/default/files/inline-images/283_4.jpg)
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் மணிவிழா நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். அதில் திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது போல் ராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளம் கொடுக்கின்றனர் எனவும் பேசி இருந்தர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் எங்கள் பாட்டன் ராசராச சோழனை இந்து மன்னன் என பேசுவது வேடிக்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னையில் மா.பொ.சி நினைவு நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு வர்ணாசிரம கோட்பாடு, புரட்சியாளர் அம்பேத்கர், அப்துல்கலாம் போன்றவர்கள் இந்த வர்ணத்தை சார்ந்தவர்கள் என கேட்கும் போது உங்களுக்கெல்லாம் கோவம் வருகிறது. அந்த கோவம் எனக்கும் வருகிறது. ஒரு காலம் வரும் பொழுது அந்த பாடப்புத்தகங்களை நாங்கள் கொளுத்துவோம் என்கிறோம். அவர்கள் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை கொளுத்துவோம் என புரிந்து கொள்கிறார்கள்.
உங்கள் பிரதமர் மோடியுடனே நாங்கள் சண்டை இடுகிறோம். அவருக்கு பிரதமராக இருக்கு நாக்பூர் தலைமை பீடத்துடனே நாங்கள் மோதுகிறோம். நீங்கள் எல்லாம் எம்மாத்திரம். அவர் ஒரு பரிதாபம் அவரை விட்டுவிடுவோம். பாஜக விடமும் ஹெச்.ராஜாவின் குடும்பத்தினரிடமும் அன்பாக கேட்டுக்கொள்வது அவரை நல்ல மனநல மருத்துவரிடம் சேருங்கள்.
வெற்றிமாறன் சொன்னது உண்மை தானே. ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் இருந்த திரைக்கலையை பொதுமைப்படுத்தியது அன்று இருந்த திராவிட இயக்கங்கள் தான். எங்கள் பாட்டன் ராசராச சோழனை இந்து மன்னன் என பேசுவது வேடிக்கை. வள்ளுவருக்கு காவி பூசியது போல் தான். உலகத்திற்கே தெரியும் அவர் சைவ மரபு என்பது. பன்னிரு திருமறைகளை காப்பாற்றி தந்தவர் அவர்தான். ராச ராசன் என்பது என் அடையாளம். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது” எனக் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் ஹெச்.ராஜாவை அநாகரீகமாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.