தமிழகத்தில் வாக்குப் பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருக்கின்றன. திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும், அக்கட்சியின் வேட்பாளர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைவர்களின் தேர்தல் பிரச்சாரங்களில் கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது.
கரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாக அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகமும், மாநில சுகாதாரத்துறையும் எச்சரிக்கை செய்தபடி இருக்கின்றன. முகக் கவசம் அணிதல் வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், கூட்டமாக சேர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் எச்சரிக்கை செய்து வருகிறது சுகாதாரத்துறை. இருப்பினும் இவையெல்லாம் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அலட்சியப்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலையை வெளிப்படுத்துகிறார்கள்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுகவின் சோழிங்கநல்லூர் வேட்பாளர் அரவிந்த் ரமேஷ், தேமுதிக வேட்பாளர்கள் விருகம்பாக்கம் பார்த்தசாரதி, சேலம் மேற்கு மோகன்ராஜ், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் அண்ணாநகர் பொன்ராஜ், வேளச்சேரி சந்தோஷ்பாபு, அ.ம.மு.க.வின் திருவள்ளூர் வேட்பாளர் குரு உள்ளிட்ட வேட்பாளர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்கள்.
அதேபோல, தேமுதிகவின் சுதீஷ், திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருக்கின்றனர். இதில், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ஏற்கனவே கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர். அவருக்கு எப்படி தொற்று வந்தது? என திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கட்சிகளில் உள்ள மூத்த நிர்வாகிகள் வேட்பாளர்களாக இருப்பதோடு, தங்கள் மாவட்டங்களில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பிலும் இருப்பதால், கரோனா பரவல் அச்சம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது. வேட்பாளர்களை கரோனாவின் இரண்டாவது அலை தாக்கிவருவதால், பல தொகுதிகளில் தேர்தல் பணிகள் மந்தமாகியுள்ளன. வேட்பாளர்கள் இல்லாமல் கட்சி நிர்வாகிகள்தான் ஓட்டு கேட்டு வருகின்றனர். கரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாகி வருவது அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் வேட்பாளர்களர்களிடமும் பீதியை உருவாக்கி வருகிறது!