சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா இன்று (29/07/2022) காலை 10.00 மணிக்கு, விவேகானந்தர் அரங்கத்தில் தொடங்கியது. இவ்விழாவில், தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேருரை நிகழ்த்தினார். அத்துடன், 69 மாணவ, மாணவியர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழை வழங்கினார். அதேபோல், விழாவிற்கு தலைமைத் தாங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, எஞ்சிய மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவிற்கு கௌரவ விருந்தினராகப் பங்கேற்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்புரை நிகழ்த்தினார். முன்னதாக, விழாவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு திருவள்ளுவர் சிலையை நினைவு பரிசாக வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "அனைவருக்கும் வணக்கம், பட்டங்களை பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். இந்திய இளைஞர்கள் மீது உலகமே நம்பிக்கை வைத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். அவரின் சிந்தனைகள் இளைஞர்களுக்கு ஊக்கமூட்டுபவை. இளைஞர்களே எனது நம்பிக்கை என சுவாமி விவேகானந்தர் கூறியது இன்றும் பொருந்தும். கரோனா தொற்று நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும் சோதனையாக அமைந்தது.
மருத்துவர்கள், விஞ்ஞானிகள் உள்பட அனைவரின் முயற்சியால் நாம் கொரோனாவில் இருந்து மீண்டோம். கடந்த ஆண்டில் இந்தியா உலகில் இரண்டாவது பெரிய செல்போன் தயாரிப்பாளராக இருந்தது. கடந்த ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 3 பில்லியன் டாலராக அதிகரித்தது. உணவுப்பொருள் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்காற்றுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்திய உலக அளவில் முன்னணியில் உள்ளது. தொழில்நுட்ப பயன்பாடு பரவலாக்கப்பட்டு வருகிறது விவசாயிகள், இல்லத்தரசிகள், சிறு வணிகர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர்.
முந்தைய அரசு, அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது; எங்கள் அரசு அதை மாற்றியது. புதிய கல்வி கொள்கை, மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் சுதந்திரத்தை இளைஞர்களுக்கு தருகிறது. கட்டமைப்பு துறையில் கொண்டு வரப்பட்ட சீர்திருத்தங்கள் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ரா.வேல்ராஜ் மற்றும் பல்கலைக்கழக ஆட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.