சிதம்பரம் வாகிச நகரைச் சேர்ந்த சரவணன் மற்றும் வேங்கான் தெரு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மி ராணியை சந்தித்து மனு அளித்தனர். அதில் சிதம்பரம் 6வது வார்டுக்கு உட்பட்ட திருப்பாற்கடல் குளம் அருகே வருவாய்த்துறை, அறநிலையத்துறை, நகராட்சி அனுமதி பெறாமல் நீர் நிலைக்கு உட்பட்ட இடத்தில் பைரவர் சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பைரவர் சிலை அமைப்பது சம்பந்தமாக கடந்த 2017ம் ஆண்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் பேரில் கோட்டாட்சியர் தலைமையில் காவல் ஆய்வாளர், நகராட்சி ஆணையர், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் இந்த இடம் அரசுக்கு சொந்தமானது என்பதாலும் நீர் நிலையில் உள்ளதாலும் கோவில் கட்டக்கூடாது எனக் கோட்டாட்சியரால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்ட விஷ்ணுவிற்கு சிலை வைப்பதுதான் நியாயம். தற்போது ஆகம விதியை மீறி பைரவர் சிலையை கும்பாபிஷேகம் செய்வது முறையாகாது. மேலும் கோவிலைச் சுற்றி வருவதற்கு வழி இல்லாமல் அபிஷேக தண்ணீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் குளம் அருகே இருப்பதால் முதியவர்களும் குழந்தைகளும் கீழே விழுந்து பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எந்த விதமான பாதுகாப்பும் இல்லை எனவே தற்போது நடைபெறும் பணிகளைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து கும்பாபிஷேக பணிகளை மேற்கொண்டு வரும் செங்குட்டுவனிடம் கேட்டபோது, வருவாய்த்துறையினரின் வாய்வழி அனுமதியுடன் இந்தப் பணிகளைச் செய்வதாகக் கூறினார்.