![One crore hawala money stuck in the car left by the robbers? - Police serious investigation!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ncVZaP5FkftklkMhxqqMzC18ZJw9dWUOP1a0ceBpDko/1609516699/sites/default/files/inline-images/rey4e64567.jpg)
கோவை அருகே கொள்ளையர்கள் நடுரோட்டில் விட்டுச் சென்ற காரில் ரூ.1 கோடி சிக்கியது. அது ஹவாலா பணமா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்தவர் அப்துல்சலாம் (50). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து தனது காரில் கோவை வழியாக கேரளாவுக்கு சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் சம்சுதீன்(42) என்பவர் ஓட்டி வந்தார். அவர்களது கார் கோவை நவக்கரை அருகே வந்தபோது மற்றொரு காரில் வந்த மர்ம கும்பல், அப்துல்சலாமின் காரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ.27 லட்சத்தை கொள்ளையடித்தனர்.
மேலும் அந்த கும்பல் அப்துல்சலாமையும், அவரது டிரைவரையும் தாக்கி கீழே தள்ளிவிட்டு காரையும், அவர்களது 2 செல்ஃபோன்களையும் பறித்துச் சென்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் கோவை-சிறுவாணி ரோடு மாதம்பட்டி அருகே அப்துல்சலாமின் கார் கேட்பாரற்று நின்றது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று காரை மீட்டனர். அதேபோல் கோவை பேரூர் பச்சாம்பாளையம் சாலையோரம் கிடந்த 2 செல்ஃபோன்களையும் போலீசார் கைப்பற்றினர்.
![police case](http://image.nakkheeran.in/cdn/farfuture/EY_eYa77actdYPu3Jwpi6hKOLw9zLbJ7lytQ-6_XtVI/1609516861/sites/default/files/inline-images/reyre_0.jpg)
இதற்கிடையே கைப்பற்றிய கார் கே.ஜி.சாவடி போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டது. அங்கு அப்துல்சலாமிடம் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணம் தொடர்பாக முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். அப்போது காரின் பின் இருக்கைக்கு கீழே, அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறையில் ரூ.1 கோடி ரொக்கப்பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த பணத்திற்கு அப்துல்சலாமிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அது ஹவாலா பணமாக இருக்கலாம் எனக் கருதி அதைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்தக் கொள்ளைச் சம்பவம் நாடகமா? என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை போலீஸ் சூப்பிரண்ட் அருளரசு நேரடியாக விசாரித்து வருகிறார்.