![north indian youth lost their life in Erode](http://image.nakkheeran.in/cdn/farfuture/5KIgoRF1_eXqeCfRwk44sK71muxGHFLsDt_iPbxGFh8/1702907715/sites/default/files/inline-images/1001_67.jpg)
ஒடிசா மாநிலம் ராயகாடா மாவட்டம் அம்பர்லா கிராமத்தைச் சேர்ந்தவர் அரிச்சந்திர பத்ரிகா (33). இவர் தனது தம்பி மற்றும் சிலருடன் ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் நல்லம்மாள் நகரில் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு அரிச்சந்திர பத்ரிகா, மது போதையில் செல்போனில் நீண்ட நேரம் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். அவரது தம்பி மற்றும் அறையில் தங்கி இருந்தவர்கள் தூங்கச் சென்றுவிட்டனர். நள்ளிரவு 12:30 மணியளவில் அவரது தம்பி எழுந்து பார்த்தபோது, அரிச்சந்திர பத்ரிகா இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரைத் தேடிச் சென்றபோது அருகில் காலியாக இருந்த மற்றொரு அறையில் அரிச்சந்திர பத்ரிகா தூக்கில் தொங்கிக்கொண்டு இருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.
அவரைக் கீழே இறக்கி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அரிச்சந்திர பத்ரிகா இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.