ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 288 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளிவந்த நிலையில், 275 பேர் இறந்துள்ளதாக ஒடிசா மாநிலத் தலைமைச் செயலர் பிரதீப் ஜனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கைகள் என்பது சில சடலங்களை மீண்டும் எண்ணியதால் ஏற்பட்ட குழப்பத்தால் தவறாக அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த எவருக்கும் இந்த விபத்தில் சிக்கி காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்திலிருந்து 28 பேர் மட்டும் இந்த ரயிலில் பயணித்ததாகவும் அவர்களில் எட்டு பேரை மட்டும் ரீச் செய்ய முடியவில்லை என்ற நிலை இருந்தது. அண்மை தகவலின்படி இரண்டு பேரை அறிய முடிந்துள்ளது. மீதமுள்ள ஆறு பேர் பற்றி விரைவில் நல்ல செய்தி வரும் என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த எவரும் இதில் பாதிக்கப்படவில்லை. அறிய முடியாமல் இருந்த ஐந்து பேரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.