![NLC trainees are on hunger struggle](http://image.nakkheeran.in/cdn/farfuture/Vm3cuojWNNtoZsL2aA8OU7BiJkmDfPX20PMa2OFWx5M/1693316651/sites/default/files/inline-images/1000_245.jpg)
கடலூர் மாவட்டம் நெய்வேலியிலுள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனம் திறந்த வெளி சுரங்கங்களின் மூலம் நிலக்கரி வெட்டப்பட்டு, அனல்மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரித்து வருகிறது. அதேசமயம் இந்நிறுவனத்திற்காக வீடு, நிலம் கொடுத்தவர்கள் மற்றும் என்.எல்.சியால் பாதிக்கப்பட்டவர்கள் தொழில்நுட்ப பிரிவு படிப்புகளை முடித்து என்.எல்.சி நிறுவனத்தில் பழகுநர்(அப்ரண்டீஸ்) பயிற்சியும் முடித்துள்ளனர்.
ஆனால் அவ்வாறு பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக, என்.எல்.சி நிர்வாகம் வேலை வழங்காமல் ஏமாற்றி வருகிறது. பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைத்தும் வேலை கொடுக்கப்படாததால் விரக்தியடைந்த பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நிரந்தர வேலை வழங்கக் கோரியும், என்.எல்.சி மற்றும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் நேற்று முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்றும் இரண்டாவது நாளாக நெய்வேலி அண்ணா திடலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர், உணவில்லாமல் பட்டினியுடன், போராட்டத்தில் ஈடுபட்ட நெய்வேலி பகுதியை சேர்ந்த சீனு என்பவர் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதனைப் பார்த்த சக போராட்டக்காரர்கள் ஆம்புலன்ஸ் மூலம் என்.எல்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இதேபோல் நீலவாணன் என்பவரும் மயக்கம் அடைந்ததால் அவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலரும் உடல் சோர்வுடன் காணப்படுவதால், வேறு அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்குள் மாவட்ட நிர்வாகம் போராட்டத்தில் ஈடுபடும் பழகுநர் பயிற்சி முடித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.