என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் நடப்பு நிதி ஆண்டின் (2020-21) முதல் காலாண்டிற்கான செயல்பாடுகள் குறித்து நேற்று முன்தினம் நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது.
அதன்படி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அந்நிறுவனம் ரூபாய் 2,386 கோடியே 86 லட்சம் மொத்த வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் (2019-20) முதல் காலாண்டில் பெற்ற மொத்த வருவாயான 1,904 கோடியே 3 லட்சத்தை விட இது 25:36 சதவீதம் அதிகம். நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் வரிக்கு முந்தைய லாபமாக ரூபாய் 455 கோடியே 42 லட்சம் ஈட்டியுள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பெற்ற ரூபாய் 429 கோடியே 12 லட்சமாக இருந்தது. 6.12 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் ரூபாய் 292 கோடியே 54 லட்சம் நிகர லாபமாக ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் பெற்ற நிகர லாபம் ரூபாய் 323 கோடியே 4 லட்சம் ஆகும். கரோனா நோய் பரவலால் ஏற்பட்ட பேரிடரை முன்னிட்டு மத்திய மின் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் மின் விநியோக நிறுவனங்கள் என்.எல்.சி இந்தியா நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 42 கோடியே 9 லட்சம் ஒரே தவணையாக தள்ளுபடி செய்யப் பட்டுள்ளதால் அத்தொகையானது நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அசாதார திட்டத்தின் கீழ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் மின் நிலையங்கள் 569 கோடியே 86 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் உற்பத்தி செய்த மின் சக்தியை விட 12:64 சதவீதம் கூடுதலாக உற்பத்தி செய்துள்ளது.
மின்சக்தி ஏற்றுமதியை பொறுத்தவரையில் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 496 கோடியே 26 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை ஏற்றுமதி செய்து கடந்த நிதியாண்டின் ஏற்றுமதியை காட்டிலும் 15.25 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிறுவனம் 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய வரி, தேய்மானம் மற்றும் கடன் தொகுப்பிற்கு முந்தைய வருவாயான 1,075 கோடியே 48 லட்சம் என்பது முந்தைய நிதியாண்டின்( 2019 - 20) முதல் காலாண்டில் ஈட்டிய தொகையான ரூபாய் 755 கோடியே 55 லட்சத்தை விட 42 : 34 சதவீதம் அதிகம்.
என்.எல்.சி நிறுவனம் துணை நிறுவனங்களுடன் இணைந்து ஒட்டுமொத்த செயல்பாடுகள் மற்றும் துணை நிறுவனங்களில் சேர்ந்து இந்நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாய் 30.6.2020 அன்றுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 3,065 கோடியே 80 லட்சம் ஆகும். கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த பிரிவில் ஈட்டிய தொகையான 2,330 கோடியே 69 லட்சத்தை விட இது 31.54 சதவீதம் அதிகம்.
இந்த தகவல்களை என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.