Skip to main content

“தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் இல்லாத அவல நிலை  நீடிக்கிறது” - ஓ.பி.எஸ்

Published on 08/01/2025 | Edited on 08/01/2025
plight of TN universities without a Vice-Chancellor continues

மாநில அரசின் பிரதிநிதியை துணை வேந்தர் தேடுதல் குழுவிலிருந்து நீக்கியது உட்பட மாநில சுயாட்சிக்கு எதிரான அனைத்துத் திருத்தங்களையும் திரும்ப பெற வேண்டுமென்று ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு உலக அரங்கில் தனிச் சிறப்புடன் விளங்க வேண்டும் என்றால், உயர் கல்வி வளர்ச்சி பெறுதல் வேண்டும். ஒரு நாடு உயர் நிலையடைய உயர் கல்வி மிகவும் அவசியம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இந்த உயர் கல்வியை அளிக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் இல்லாத அவல நிலை தமிழ்நாட்டில் நீடிக்கிறது. இந்த நிலையில், உயர் கல்விக்கான வரைவு கொள்கையை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டு, அதில் துணை வேந்தர் நியமனத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இது நாள் வரை, துணை வேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவில், மாநில அரசின் பிரதிநிதி, வேந்தரின் பிரதிநிதி மற்றும் பல்கலைக்கழக செனட் / சிண்டிகேட் பிரதிநிதி என மூவர் இடம் பெற்று வந்தனர். இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியையும் சேர்க்க வேண்டுமென்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதன் காரணமாக துணை வேந்தர் நியமனம் என்பது காலதாமதமாகிக் கொண்டே வந்தது. 

இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவால் வெளியிடப்பட்டுள்ள வரைவுத் திருத்தங்களில், துணை வேந்தர் நியமனத்தில் மேதகு கவர்னருக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, தேடுதல் குழுவின் கவர்னருக்கு பிரதிநிதி, பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி மற்றும் பல்கலைக்கழக உயர் அமைப்பின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே துணை வேந்தர் நியமனத் தேடுதல் குழுவில் இருக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவுக் கொள்கையில் மாநில அரசின் பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளது மாநிலத்தின் உரிமையை பறிக்கும் செயலாகும். இது மட்டுமல்லாமல், பேராசிரியர்கள் அல்லாத, தொழில் துறை, பொது நிர்வாகம் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பத்தாண்டுகள் அனுபவம் பெற்றவர்களும் துணை வேந்தராக வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது கல்லூரிகளில் பேராசிரியர்களாக பணிபுரிபவர்களின் வாய்ப்பினை பறிக்கும் செயலாகும்.

இதுபோன்ற திருத்தங்கள் எல்லாம் எதிர்காலத்தில் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்த தீர்க்கதரிசி புரட்சித் தலைவி அம்மா, 1991 முதல் 1996 வரையிலான முதல் ஆட்சிக் காலத்தில், பல்கலைக்கழகங்களில் முதல்-அமைச்சரை வேந்தராக நியமிக்க வழிவகை செய்யும் சட்டமுன்வடிவு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கவர்னரின் கடைசி வரை ஒப்புதல் அளிக்கவில்லை. அப்போது, கவர்னரின் செயலுக்கு ஆதரவளித்தது தி.மு.க. அதாவது, மாநில சுயாட்சிக்கு எதிரான செயலுக்கு ஆதரவு அளித்த கட்சி தி.மு.க. இதோடு மட்டுமல்லாமல், கேலியும், கிண்டலும் செய்த கட்சி தி.மு.க. அன்றைக்கு தி.மு.க. இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தால், இன்றைக்கு அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் முதல்-அமைச்சரே வேந்தராக இருந்திருக்கும் நிலைமை உருவாகி இருக்கும். இதனைக் கெடுத்தது தி.மு.க. அன்றைக்கு தி.மு.க. மாநில சுயாட்சிக்கு எதிராக நடந்து கொண்டதன் காரணமாக அதற்கான விளைவினை தற்போது தமிழ்நாடு எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உயர் கல்வியில் மாநில உரிமை இழந்துள்ளதற்கு மூலக் காரணமான தி.மு.க. விற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசின் பிரதிநிதியை துணை வேந்தர் தேடுதல் குழுவிலிருந்து நீக்கியது உட்பட மாநில சுயாட்சிக்கு எதிரான அனைத்துத் திருத்தங்களையும் திரும்ப பெற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்