கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் சார்பில் மிகப்பிரம்மாண்டமான புத்தக கண்காட்சி ஆண்டு தோறும் நடைபெறும். இந்த ஆண்டு 22-வது புத்தகக் கண்காட்சி நேற்று மாலை தொடங்கியது. என்.எல்.சி நிர்வாக இயக்குனர் ராகேஷ்குமார் தலைமையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இக்கண்காட்சியானது வருகிற 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. புத்தகக் கண்காட்சியில் 150 பதிப்பாளர்கள் கலந்துகொண்டு, 176 அரங்குகளில் பல லட்சம் புத்தகங்களை காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைத்துள்ளார்கள்.
இக்கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய, மாநில அரசுகளின் முக்கிய பிரமுகர்கள், கலைஞர்கள், படைப்பாளர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொள்கின்றனர். எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் பாராட்டப்படுவர். புதிய நூல்களின் வெளியீடுகளும் நடைபெறும்.
திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 15,000 பேர் கண்காட்சியை இலவசமாக பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட உள்ளார்கள். பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் புத்தக கண்காட்சிகள் மட்டுமின்றி, அரங்கில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சி, பொழுது அம்சங்கள் நடைபெற உள்ளன.
எழுத்தாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என பலரும் தங்களுக்கு தேவையான புத்தங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். அரசியல், அறிவியல், நாவல்கள், பிரபல எழுத்தாளர்களின் கவிதை தொகுப்புகள், வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், கலை, இலக்கியம், உலக நிகழ்வுகள், உடற்பயிற்சி உள்ளிட்ட அனைத்து விதமான நூல்களும் உள்ளதால் அனைவரும் இக்கண்காட்சியை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று புத்தக பிரியர்களும், பதிப்பகத்தாரும் வலியுறுத்துகின்றனர்.