கரோனா வைரஸ் பீதியால் சுற்றுலா தளங்கள் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தலங்களுள் ஒன்றான வேளாங்கண்ணியும் சுற்றுலா பயணிகளின் வருகையில்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களே தாமாக முன்வந்து பயணத்தைத் தவிர்த்து வருகின்றனர். பிரதான சுற்றுலாத்தலங்கள், மக்கள் அதிகம் கூடும் கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டேண்ட் என பல மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இருந்தே இந்த வைரஸ் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதால், பொதுமக்கள் வெளியில் தளைகாட்டவே தயங்குகின்றனர். அதனால் பல இடங்கள் வெறிச்சோடியே காணப்படுகிறது.
அந்த வகையில் நாகை மாவட்டத்தின் உள்ள பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்திற்கும் பக்தர்களின் வருகை குறைந்து வெறிச்சோடி கிடக்கிறது. கோடை காலம் என்பதாலும் ஈஷ்டர் பண்டிகை காலம் என்பதாலும், இந்த மாதம் கூட்டம் கால்வைக்க முடியாத அளவுக்கு அலைமோதும், அதனை நம்பி வர்த்தகர்கள், இந்த ஆண்டும் ஏராளமான சரக்குகளை கொள்முதல் செய்து வைத்துள்ளனர்.
வைரஸ் தாக்குதல் பீதியால் மக்களின் வருகையில்லாமல் அங்குள்ள கடைகள், வீதிகள் என அனைத்து இடங்களும் வெறிச்சோடியே காணப்படுகிறது. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களிலும் வழக்கத்தை விட பொதுமக்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைந்துவிட்டது. இதனால் வியாபாரிகளும், வர்த்தகர்களும் வேதனையில் உள்ளனர்.