![jlk](http://image.nakkheeran.in/cdn/farfuture/Q2tkUO_2FxDA0JsXduHj_djmcfWo3I_EnbBNa1seqss/1646219305/sites/default/files/inline-images/cv%20shanmugam_3.jpg)
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49வது வார்டில் கள்ள ஓட்டுப் போட முயன்றதாகக் கூறி திமுக பிரமுகர் ஒருவரைத் தாக்கி, அரைநிர்வாணமாக அழைத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்தது, தொழிற்சாலை அபகரிப்பு செய்தது என அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதியப்பட்டன.
அமைச்சர் ஜெயக்குமார் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. அந்த வகையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். இந்த நிலையில், சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதற்கிடையே இன்று மாலை விழுப்புரம் மாவட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் வடக்கு மாவட்ட போலீசார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜெயக்குமாருக்கு அடுத்து சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி வரும் நிலையில், தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.