
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி அதிகாலை நேரத்தில் தொழுகை முடித்துவிட்டு வரும் பொழுது வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லையில் கடந்த 18 ஆம் தேதி ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஜாகிர் உசேன் பிஜில் அதிகாலை நேரத்தில் தொழுகை முடித்துவிட்டு வரும் பொழுது வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லை டவுன் காவல் நிலைய போலீசார் ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கு நிகழ்வதற்கு முன்பே 'தான் கொலை செய்யப்படலாம்' என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஜாகிர் உசேன் வீடியோ வெளியிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் தவுஃபிக் என்கிற கிருஷ்ணமூர்த்தி மற்றும் சிறார் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் தவுஃபிக்கின் மனைவி நூர் நிஷாவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் சரணடைந்த அக்பர்ஷா என்பவரின் சகோதரரான பீர்முகமது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.