![New railway station at Clambake 40 lakhs provided by Tamil Nadu Government](http://image.nakkheeran.in/cdn/farfuture/zFmvmyJ5dXOGfip_1uX3Vrtb8KvtpX3cGJoMduIEUxE/1691645887/sites/default/files/inline-images/kilamabakkam-bus-stand.jpg)
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் முழுவதும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாகப் பண்டிகை நாட்களில் சென்னை மாநகரம் கடும் வாகன நெரிசலில் சிக்கத் தவிக்கும். கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் செல்லவே சில மணி நேரம் ஆகிவிடும்.
இதனைத் தவிர்க்க சுமார் 393 கோடி செலவில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்தப் பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால், தென் தமிழகத்துக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இங்கிருந்தே புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் அருகே பயணிகள் வசதிக்காக, வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே புதிய புறநகர் ரயில் நிலையம் அமைப்பது தொடர்பாக தெற்கு ரயில்வே நிர்வாகத்துடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை மேற்கொண்டது. அப்போது சென்னை கிளாம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் அருகே பயணிகள் வசதிக்காக புதிய ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு வைத்த கோரிக்கையை ரயில்வே துறை ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து புறநகர் ரயில் அமைப்பதற்கான முழுச்செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்வதாக ஒப்புதல் வழங்கி இருந்தது. அதன்படி புதிய ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு முதற்கட்டமாக 40 லட்ச ரூபாயை ரயில்வே துறைக்கு வழங்கியுள்ளது. புறநகர் ரயில் அமைக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டவுடன் ஓராண்டில் புறநகர் ரயில் நிலையக் கட்டுமானப் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.