![nellai kutralam](http://image.nakkheeran.in/cdn/farfuture/vikkVdOPg5_gicGY0iTbJGDQaj40-lpMGKH3Mt9-R_I/1596303458/sites/default/files/inline-images/zfsfs.jpg)
சர்வ வல்லமை கொண்டவர்கள் என்று மார்தட்டுகிற வல்லரசு நாடுகளையே வந்து பார் என்று தாக்கும் கரோனா அந்நாடுகளை எல்லாம் மண்டியிட வைத்திருக்கிறது. அதன் வலிமை மட்டுமல்ல, எட்டுத்திக்கிலும் கரோனா பல்வேறு வழிகளில் மரண அடிகளைக் கொடுத்து வருகிறது. அடித்தட்டு மக்களின் வருமானம் தொட்டு அரசு வருவாய் வரை அணுகுண்டை வீசி முடக்கிப் போட்டு விட்டது கரோனா என்பது தான் நிதர்சனம்.
முக மூடியாக கவசத்தை அணிந்திருக்கும் மக்களின் வாழ்க்கையோ மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது கடந்த நான்கு மாதமாக தொழில், வேலையிழப்பு உடல் அகௌகரியம் எனப் பல்வேறு வழிகளிலும் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர். என்று தணியும் இந்தக் கரோனாத் தொற்று? இந்த ஜென்மத்தில் முடிவுக்கு வந்து விடுமா என்பது தான் மக்களின் ஏக்கம்.
இதனால் கண்ணெதிரே வருவாய்க்கான பாதை தெரிந்தும் பயணிக்க முடியாத அவலம்தான் கொடுமையிலும் கொடுமை. தென்காசி மாவட்டத்தின் கோடை வாசஸ்தலம் அருவிகளின் நகரமான குற்றலத்தில் தென்மேற்குப் பருவக்காற்றின் தொடர் மழையால் அதன் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும். ஜூன் தொடங்கி ஆகஸ்ட் மாதத்தையும் தாண்டிய சீசனிருக்கும். நேற்றையதினம் இரவு மலையில் பெய்த மழையால் அனைத்து அருவிகளிலும், தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குறிப்பாகக் குற்றால மெயின் அருவியில் தண்ணீர் கோரிக்கையற்று வெள்ளமாய்க் கொட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் குளிப்பதற்குத் தான் ஆளில்லாமல் காற்று வாங்குகிறது குற்றாலம். சுற்றுலாப் பயணிகளின் வரத்தை நம்பி பழக்கடை, கவரிங் செட் கடை நடத்துகிற குற்றாலத்தின் ராமையா பாண்டியன் வாட்டத்திலிருக்கிறார். அவர் சொல்லுவது. இதுதான்
வருடம் தோறும் குற்றால சீசனை அனுபவிக்க மலையருவி மூலிகைக் குளியல் போட லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்லும் 4 மாதமும் நகரம் களைகட்டும். அவர்களைக் கொண்ட வியாபாரம் தான் எங்களின் பிழைப்பு. ஹோட்டல், விடுதிகள், பார்கள், கார் பார்க்கிங் என்று அனைத்து வியாபாரமும் சூடாக நடக்கும். தோராயமாகப் பார்த்தாலும், அரசுக்கான சுற்றுலாப் பயண வருமானம் உட்பட அதனை நம்பியுள்ள அண்டை கிராமம் மற்றும் நகரத்திலுள்ள நூற்றுக்கணக்கானவர்களின் தொழில் வியாபாரம் ஆண்டொன்றுக்கு சுமார் 150 கோடியைத் தாண்டும். எங்களின் தலைவிதி இந்த வருடம் கரோனா காரணமாக குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் தொற்று அதிகரிக்கும் என்பதால் தடை விதிக்கப்பட்டுவிட்டது. அதனால் எங்களின் பிழைப்பு உட்பட நகரமும், அருவிகளும், மனித நாட்டமின்றி காற்று வாங்குகின்றன. வருட வருமானம் போச்சு. எங்களின் ஜீவாதாரமே அந்தரத்தில் தொங்குகிறது. என்றார் வேதனையுடன்.
குற்றாலத்தில் கொட்டுவது அருவியல்ல. அதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழில் வியாபாரிகளின் கண்ணீர்.