திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே பள்ளி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய சமத்துவ நவராத்திரி கொலு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வத்தல்குண்டு அருகே உள்ள பழைய வத்தலக்குண்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் குட்டிக்கண்ணன் பயிற்சி மையம் சார்பில், அந்த மையத்தில் படிக்கும் பள்ளி மாணவர்கள் இணைந்து, அதே பகுதியில் உள்ள மகா பரமேஸ்வரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சமத்துவ நவராத்திரி கொலு விழாவினை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக பன்னிரண்டாவது ஆண்டான இவ்வாண்டிலும் நவராத்திரி கொலு விமர்சையாக நடைபெற்று வருகிறது. லட்சுமி, சரஸ்வதி, வராகி உள்ளிட்ட அஷ்ட லட்சுமிகளின் சிலைகள் கொலுவில் பிரதானமாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பயிற்சி மைய மாணவர்கள் தங்கள் தனி திறனை வெளிப்படுத்தும் வகையில் கைலாய மலையை உருவாக்கி அதில் சிவன் இருப்பது போல் அமைத்துள்ளனர். அதுபோல் பிருந்தாவனம், சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் என கொழுவை காணவரும் பக்தர்களை கவரும் விதத்தில் நவராத்திரி கொலு பொம்மைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்த நவராத்திரி கொலுவினை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பார்த்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் பிரசாதங்கள் வழங்குவதோடு, மூலிகை தீர்த்தமும் மாணவர்களால் வழங்கப்பட்டு வருகிறது அது போல் சமத்துவ கொலுவை உருவாக்கி மழை வேண்டி நாள் தோறும் சிறப்பு பூஜை செய்யும் மாணவர்களின் செயல்பாட்டை கண்டு பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.