![natural farmer created image of bull paddy](http://image.nakkheeran.in/cdn/farfuture/CcFvmunooNzTt8G-QhHFS_ydQC3Ow5dPfayKokPvB8c/1667826681/sites/default/files/inline-images/999_101.jpg)
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாக ஒரு ஏக்கர் பரப்பளவில் விவசாயி ஒருவர் நெற்பயிரால் காளை மாட்டின் ஓவியத்தை வரைந்துள்ள பிரமிக்கத்தக்கக் கழுகுப் பார்வை காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் நீர்முளை அருகே உள்ள மாராச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு காளிதாஸ். இயற்கை விவசாயியான இவர் பாரம்பரிய நெல் ரகத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும் உழவுக்கு உற்றத் தோழனாக இருக்கும் மாடுகளுக்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாகவும் தனது வயலில் சின்னார் என்ற பாரம்பரிய நெல் ரகத்தைப் பயிரிட்டுள்ளார். அதனைச் சுற்றி மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும் குதிரைவாலி வளர்த்து அவற்றை ஒரு ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஓவியமாகப் படைத்துள்ளார். 115 நாள் வயதுடைய குறுவை பயிரான சின்னார் என்ற பாரம்பரிய ரகம் மருத்துவ குணம் உடையது.
சிகப்பு நிற கதிர்களை உடைய இந்தப் பயிர் மழை வெள்ளத்தினால் கீழே சாயாத தன்மையுடையது. இதனைக் காளையின் உருவத்தில் வயலில் நட்டு வைத்து, அதனைச் சுற்றி தீவனப்பயிரான குதிரைவாலியை வளர்த்துள்ளார். தற்போது அந்தப் பயிர்கள் நன்கு வளர்ந்த நிலையில், உயரத்திலிருந்து பார்த்தால் காளை உருவம் தெரிகிறது. இதனை ட்ரோன் உதவியுடன் ஆகாயத்திலிருந்து கழுகுப் பார்வையில் படமாக்கி உள்ளார்.
வயல்வெளிகள், வீடுகள், குளங்கள் இவற்றுக்கு நடுவே தெரியும் பசுமை ஓவியம் அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.