நாமக்கல் மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்கள் எல்லாமே தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் கூறினார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதா, சட்ட விரோதமாக குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், திங்கள்கிழமை (ஏப்ரல் 29) செய்தியாளர்களிடம் கூறியது:
குழந்தைகள் விற்பனை வழக்கை பொருத்தவரை மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெற்றோர்களே முழு சம்மதத்துடன்தான் குழந்தைகளை பிறருக்கு கொடுத்துள்ளனர். என்றாலும், அவை சட்டப்பூர்வமாக இல்லாதது குற்றம்தான். ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில் இருந்து ஏதாவது குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதா என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களும் ரொம்பவே ஸ்டிரிக்டாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறி செயல்பட்டு வந்த நாலைந்து இல்லங்கள், சமூக பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, மூடப்பட்டு விட்டன. அதனால் ஆதரவற்ற இல்லங்கள் மூலமாக குழந்தைகள் விற்பனை செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை.
இதுவரை கிடைத்த தகவல்களின்படி, எல்லா குழந்தைகளுமே தனியார் இடத்தில் இருந்துதான் விற்கப்பட்டு உள்ளன. பெண் குழந்தைகளோ, ஆண் குழந்தைகளோ அவற்றை வளர்க்க முடியாத பெற்றோர்கள் தமிழக அரசின் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கலாம்.
குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க விரும்புவோர் நேரடியாக அரசை அணுகலாம். இதற்கென தத்து மையங்கள் உள்ளன. முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும். குழந்தைகளை வளர்க்கும் வசதி வாய்ப்புகள் இருக்கின்றதா என்பதை எல்லாம் ஆராய்ந்து குழந்தைகள் சட்டப்பூர்வமாக தத்து கொடுக்கப்படும். வெளிநாட்டு தம்பதிகளும்கூட இங்கே வந்து குழந்தைகளை தத்தெடுக்கலாம். இவ்வாறு ஆட்சியர் ஆசியா மரியம் கூறினார்.