கரோனா தடுப்பூசிகள் விமானம் மூலம் பலத்த பாதுகாப்புடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
நாடு முழுவதும் ஜனவரி 16- ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ள நிலையில், புனேவில் இருந்து 9 விமானங்கள் மூலம் 56.5 லட்சம் கரோனா தடுப்பூசிகள் பலத்த பாதுகாப்புடன் சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஐதராபாத், பாட்னா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், புனேவிலிருந்து விமானத்தில் 5.36 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 20,000 கோவாக்சின் தடுப்பூசிகளும் பலத்த பாதுகாப்புடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. இதையடுத்து, இந்த தடுப்பூசிகள் சென்னையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வந்து பின்னர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஜனவரி 16- ஆம் தேதி முதல் முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணியை மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளார்.
கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியை புனேவைச் சேர்ந்த 'சீரம்' இன்ஸ்டிடியூட் நிறுவனமும், கோவாக்ஸின் தடுப்பூசியை ஐதராபாத்தைச் சேர்ந்த 'பாரத் பயோ டெக்' நிறுவனமும் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.