சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவந்த தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் (13.09.2021) நிறைவு பெறுகிறது. நடப்பு கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய கூட்டத்தொடரில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார். அந்த மசோதாவில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
நீட் தேர்வு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ராஜன் குழு அறிக்கையிலிருந்து தெளிவாகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மாணாக்கரின் நம்பிக்கை, கனவுகளை நீட் தகர்த்துள்ளது. கட்டாயமான கூடுதல் தேர்வினால் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்குப் பெரும் சுமை ஏற்பட்டுள்ளது. சமூகநீதியை உறுதி செய்யவும், சமத்துவம், சமவாய்ப்பை நிலைநிறுத்தவும் சட்டம் ஒன்றை இயற்ற அரசு முடிவு செய்தது. பாதிப்புக்குள்ளாகும் அனைத்து மாணவர்களையும் பாதுகாக்க சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.