தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதியானால் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் 66 பேர் ஒமிக்ரானில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 பேருக்கு இன்று ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 10-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஜனவரி 10-ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் போன்றவை தற்போது நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 6ஆம் தேதி சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெற இருந்த நிலையில் அதையும் ஒத்திவைப்பதாகத் தெரிய வருகிறது.
ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் சரியான வழிகாட்டு நெறிமுறைகளுடன் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்களில் தற்போதுள்ள நடைமுறைகளே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள், விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதி வழங்கப்படும். பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள், யோகா, உடற்பயிற்சி நிலையங்கள் 50 சதவீத வாடிக்கையாளருடன் செயல்படும். திருமண நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். துணிக்கடைகள் மற்றும் நகை கடைகள், திரையரங்குகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். திறந்தவெளி மைதான விளையாட்டு நிகழ்வுகள் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுத்தப்படும். அழகு நிலையங்கள் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மெட்ரோ ரயில்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவுறுத்தப்பட்டுள்ளது.