நாகை மாவட்டத்தில் கஞ்சா வியாபாரம் படுஜோராக நடந்துவருகிறது. அதன் ஒருபகுதியாக ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்டு நாகையில் விற்பனை செய்வதற்காக தயார்நிலையில் இருந்த கஞ்சாவை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
நாகை மாவட்டத்தின் வேதாரண்யம், கீழ்வேளூர், திட்டச்சேரி, சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை படு ஜோராக நடந்துவருகிறது. அதில் நாகை டவுன்பகுதியில் நடக்கும் கஞ்சா விற்பனை குறித்த தகவல், நாகை மாவட்ட எஸ்.பி. விஜயகுமாருக்கு கிடைத்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, ஏ.எஸ்.பி.பி. பத்மநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கடந்த 2 தினங்களாக பல்வேறு இடங்களில் ரகசியமாக சோதனை நடத்தினர். அப்போது நாகை வெளிப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்தனர்.
தர்மன்கோவில் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து காவல்துறையினர் சென்றனர். அதற்குள் காக்கிகளில் உள்ள கருப்புக்காக்கிகளின் ரகசிய தகவலால், அங்கிருந்த கஞ்சா வியாபாரிகள் தப்பி ஓடிவிட்டனர். வீட்டின் உள்ளே நுழைந்து சோதனை நடத்தினர். அங்கு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும், வேறுமாவட்டத்திற்கு அனுப்பி விற்பனை செய்வதற்காகவும் பொட்டலம் போடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து காக்கிகள் நடத்திய நடத்திய விசாரணையில், கஞ்சாவியாபாரிகள் நாகை சந்தைப்பகுதியை சேர்ந்த ராணியும் அவரது மகன் ஆனந்த் மற்றும் அவரது மனைவி மீனாட்சி ஆகிய மூவரும் என்பது தெரியவந்து, வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
இதுகுறித்து காக்கிகள் வட்டாரத்தில் விசாரித்தோம், "ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி, மதுரை வழியாக ஒவ்வொரு ஏரியாவாக பிரித்துக்கொடுத்துவிட்டு இறுதியாக நாகைக்கு வருவதாக தெரியவந்துள்ளது. இங்குவந்து சிறிது சிறிதாக பாக்கெட் போட்டு பல இடங்களில் விற்பனை செய்கின்றனர். தற்போது பிடிப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ஒரு கோடி. இது தொடர்பாக மேலும் பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். "என்கிறார். இந்த சம்பவம் ஒருபுறம் நடக்க அதே நாளில் நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக இருந்த கஞ்சாவை கடலோர காவல்படை கைப்பற்றியுள்ளனர்.
கோடியக்கரையில் இலங்கைக்கு கடத்துவதற்காக சவுக் பகுதியில் கஞ்சா மறைத்து வைத்திருப்பதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து டி.எஸ்.பி. களிதீர்த்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு ஆய்வு செய்ததில், ஏழு மூட்டைகளில் 150 கிலோவை கைப்பற்றினர். ஒரே நாளில் அடுத்தடுத்த இடங்களில் கஞ்சா போதைப்பொருள்களை கைப்பற்றியது பெரும் அதிர்வளையை உண்டாக்கி வருகிறது.