‘நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வு நம்மில் பலருக்கும் இல்லவே இல்லை. அதனால்தான் விற்பனையாளர்களால் ஒவ்வொரு நாளும் நுகர்வோர் ஏமாளிகள் ஆக்கப்படுகின்றனர்.’ என்பது பொதுவான கருத்தாக உள்ளது.
நுகர்வோர் என்றால் யார்? பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்குபவர்தான் நுகர்வோர். அவரே, பணம் கொடுத்து சேவையைப் பெறுபவரும் ஆகிறார். அந்த வகையில், நாம் அனைவருமே நுகர்வோர்தான். அந்த நுகர்வோருக்கு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் சில உரிமைகளை வழங்குகிறது. 1986-க்கு முன், அதாவது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, நுகர்வோர் தங்களுக்கு இழைக்கப்படும் எல்லா அநீதிகளையும் பொறுத்துக்கொள்ள வேண்டிய அவலம் இருந்தது. அதன்பிறகு, நிலைமை மாறிவிட்டது. எந்த ஒரு நுகர்வோரும், தான் வாங்கிய பொருளில் குறையோ, சேவையில் குறைபாடோ இருந்தால், நுகர்வோர் நீதிமன்றத்தை நாட முடியும். இழந்த நஷ்டத்தை அபராதத்துடன் பெறமுடியும். இதன்மூலம், மற்ற நுகர்வோரும் நஷ்டம் அடையாதவாறு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
விழிப்புணர்வு மிக்க நுகர்வோர் ஒருவர் தொடர்ந்த வழக்கையும், அவருக்குக் கிடைத்த நல்லதொரு தீர்ப்பையும் இங்கே விவரித்திருக்கிறோம்.
விருதுநகரைச் சேர்ந்த சரவணன் என்பவர், 3-வது வகுப்பு படிக்கும் தன் மகனுக்கும், 1-ஆம் வகுப்பு படிக்கும் தன் மகளுக்கும், கடந்த 30-5-2016 அன்று இரண்டு ஸ்கூல் பேக்குகளை, அதே ஊரில் உள்ள டாப் பேக் சித்தார்த் அசோசியேட்ஸ் என்ற கடையில், ரூ.1200 விலைக்கு வாங்கினார். இரண்டே வாரங்களில், அந்த பேக்குகளில் ஜிப் மூடும் பகுதி பிரிந்துவிட்டது. இதுகுறித்து அவர் டாப் பேக் கடையில் முறையிட, சரிசெய்து கொடுத்தனர். அதனை வீட்டுக்கு எடுத்துச்சென்று பிள்ளைகளிடம் கொடுத்தார். அதே நாளில், இரு பேக்குகளில் ஒன்றின் கைப்பிடி பிரிந்து வந்துவிடும் நிலையில் இருந்தது. அதனால் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன், மீண்டும் அந்த பேக் கடைக்குச் சென்று, பேக்குகள் தரமற்றவையாக இருக்கின்றன என்று கூறியிருக்கிறார். பதிலுக்கு அக்கடைக்காரர், “பேக் என்றால் அப்படித்தான் இருக்கும்..” என்று அலட்சியமாகப் பேசிவிட்டு, “இந்த பேக் நாங்கள் தயாரித்தது அல்ல. மதுரையில் உள்ள டாப் பேக் பிரைவேட் லிமிடெட்டின் தயாரிப்பு.” என்று, வாடிக்கையாளரின் புகாரை மதுரையில் உள்ள நிறுவனத்தின் மீது திருப்பினர்.
தரமற்ற பேக்குகளை அதிகவிலையில் வாடிக்கையாளர் தலையில் கட்டிவிட்டு, நோகடிக்கவும் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன், விருதுநகர் மற்றும் மதுரையில் இயங்கிவரும் ‘டாப் பேக்’ நிறுவனத்துக்கு ‘லீகல் நோட்டீஸ்’ அனுப்பினார். பதில் நோட்டீஸ் அனுப்பிய அந்நிறுவனத்தினர், ஒருகட்டத்தில் வேறு பேக்குகள் தருகிறோம் என்று சமரசத்துக்கு வந்தனர். அப்படியென்றால், வழக்கறிஞருக்காக செலவழித்த தொகையை, அவருக்குக் கொடுத்துவிடுங்கள் என்று கூறினார் சரவணன். டாப் பேக் நிறுவனம் மறுத்த நிலையில், வழக்கு தொடர்ந்தார். மூன்று வருடங்களாக, சரவணனுக்காக வழக்கறிஞர் மாரிகுமார் நடத்திய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
அந்தத் தீர்ப்பில், தரமற்ற சோபா குறித்து ராஜஸ்தானில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சோபா வாங்கிய சிறிது காலத்திற்குள் அதில் பழுது ஏற்பட்டால், அந்த சோபா குறைபாடுள்ள சோபா என்றும், அந்த சோபாவுக்கு உண்டான பணத்தை திருப்பிக்கொடுக்க உத்தரவிடவேண்டுமென்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஸ்கூல் பேக் குறித்த இந்த வழக்கின் சந்தர்ப்ப சூழ்நிலையை கவனமாக ஆய்வு செய்கின்றபோது, விற்பனையான பேக்குகள் இரண்டு வாரத்திற்குள்ளேயே பழுதடைந்துவிட்டதால், அந்த பேக்குகள் குறைபாடுள்ள பள்ளி பேக்குகள் என்றும், ராஜஸ்தான் வழக்கு தீர்ப்பின் அடிப்படையிலும், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், மேற்படி பிரச்சனைக்கு முடிவு செய்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சரவணனுக்கு பேக்கின் விலையான ரூ.1200-ஐ உடனடியாக திரும்பக் கொடுக்க வேண்டுமென்றும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் சௌகரிய குறைவுகளுக்கு ரூ.10000 நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென்றும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.3000-ஐ கொடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டிருக்கிறது விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்.
ரூ.1200 பெறுமான ஸ்கூல் பேக்குகளுக்காக மூன்று வருடங்கள் வழக்கு நடத்தியதை, பாமர பார்வையில் ‘இதெல்லாம் வேண்டாத வேலை; கால விரயம்’ என்று கூறிவிட முடியும். அதேநேரத்தில், தவறைத் தட்டிக்கேட்டு, நீதி கிடைப்பதற்காக அவர் போராடியதெல்லாம் தன் ஒருவருக்காக மட்டுமல்ல. நுகர்வோர் விழிப்புணர்வு பெறுவோம்!